இந்தியா மற்றும் அல்ஜீரியா இடையேயான முதல் கூட்டுக் கமிஷன் கூட்டம் 2026 மே 05 அன்று புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, பயிற்சி, இராணுவப் பயிற்சிகள், மருத்துவ ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் ஆகிய துறைகளில் இரு தரப்பினருக்கும் பொதுவான நலன்கள் குறித்து விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியா-அல்ஜீரியா பாதுகாப்பு ஒத்துழைப்பின் செயலாக்கத்தை மேற்பார்வையிடுவதற்கான நடைமுறை விதிகளை இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இது கூட்டுக் கமிஷன் கூட்டங்களுக்கு வழிகாட்டும் கட்டமைப்பாகச் செயல்படும். இக்கூட்டத்திற்கு, சர்வதேச ஒத்துழைப்புக்கான இணைச் செயலாளர் திரு அமிதாப் பிரசாத் மற்றும் அல்ஜீரிய கடற்படைத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் கைட் நூர் எடின் ஆகியோர் இணைத் தலைமை தாங்கினர். இந்தியக் குழுவில் முப்படைகள், தலைமையகம், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள், பாதுகாப்பு உற்பத்தித் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), முப்படைகளின் மருத்துவ சேவைகள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
2024-ல் பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து இந்தியாவுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு வேகம் பெற்றுள்ளதுடன், இரு தரப்பிலிருந்தும் உயர்மட்டப் பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது. அல்ஜீரிய கடற்படைத் தலைமைத் தளபதியின் இந்தப் பயணம், இந்தியா-அல்ஜீரியா பாதுகாப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதோடு, பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான இரு தரப்பினரின் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துகிறது.
கூட்டத்திற்கு முன்னதாக, மேஜர் ஜெனரல் கைத் நூர் எடின் புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, வீரமரணம் அடைந்த நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தப் பயணத்தின் போது அல்ஜீரிய தூதுக்குழுவினர் பாதுகாப்புத் தொழில்துறையினருடனும் கலந்துரையாடுவார்கள்.
எம்.பிரபாகரன்
