அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறுகையில், இந்தியா தனது பாதுகாப்புப் பயணத்தில் ஒரு தீர்க்கமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்றும், அங்கு தொழில்நுட்பம், உள்நாட்டுப் புத்தாக்கம் மற்றும் தனியார் துறைப் பங்களிப்பு ஆகியவை நாட்டிற்கு ஒரு புதிய உலகளாவிய அடையாளத்தை உருவாக்குகின்றன என்றும் தெரிவித்தார்.
பிரயாக்ராஜில் நடைபெற்ற நார்த் டெக் சிம்போசியம் 2026-ல் உரையாற்றிய அமைச்சர், போர் என்பது இனி உடல் பலத்தால் மட்டும் வரையறுக்கப்படவில்லை என்றும், மாறாக மேம்பட்ட தொழில்நுட்பங்கள், நிகழ்நேர தரவு அமைப்புகள் மற்றும் தானியங்கி தளங்களால் அது பெருகிய முறையில் இயக்கப்படுகிறது என்றும் கூறினார். இந்த மாற்றம் இந்தியாவின் செயல்பாட்டுத் திறன்களையும் உலகளாவிய நிலையையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில், இந்தியா பாதுகாப்பு உபகரணங்களை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடாக இருந்து, வளர்ந்து வரும் ஏற்றுமதியாளராக மாறியுள்ளது என்றும், பாதுகாப்பு உற்பத்தி ஒரு தசாப்தத்தில் 174% உயர்ந்து ₹1.54 லட்சம் கோடியை எட்டியுள்ளது மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி ஒரு தசாப்தத்தில் 34 மடங்கு உயர்ந்து ₹23,622 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கூட்டு பாதுகாப்பு உற்பத்தியை நோக்கிய ஒரு பெரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில், மொத்த ஏற்றுமதியில் சுமார் ரூ.15,000 கோடி மதிப்பிலான கணிசமான பங்களிப்பு தனியார் துறையிலிருந்து வந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
அரசின் ஆதரவு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட அமைச்சர், நடப்பு 2026-27ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.6,81,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டை விட 9.5% அதிகம் என்றும் கூறினார்.
இந்தியாவின் விரிவடைந்து வரும் தொழில்நுட்ப அடித்தளத்தைக் குறிப்பிட்ட அமைச்சர், விண்வெளி, அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகள் தற்போது பாதுகாப்புத் தயார்நிலைக்கு இன்றியமையாதவையாக உள்ளன என்றார். எதிர்காலப் போர் முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கவிருக்கும் குவாண்டம்-பாதுகாப்பான தகவல் தொடர்புத் திறன்களில் இந்தியா ஏற்கனவே விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா
