சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான 3வது கூட்டுக் குழுக் கூட்டத்தில், இந்தியாவும் ஜப்பானும் சுகாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்தின.

இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான சுகாதாரம் தொடர்பான 3வது கூட்டுக் குழுக் கூட்டம் இன்று இங்குள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் ஜப்பானின் சுகாதாரக் கொள்கைப் பொறுப்பு அமைச்சர் திருமதி. கிமி ஒனோடா ஆகியோர் இணைத் தலைமை வகித்தனர்.

தூதுக்குழுவினரை வரவேற்றுப் பேசிய மத்திய சுகாதாரச் செயலாளர் திருமதி. புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, இந்தியாவும் ஜப்பானும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன என்று குறிப்பிட்டார். இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்ற கூட்டுக் குழுக் கூட்டம், வழக்கமான உரையாடல் மற்றும் ஆழமான பரஸ்பரப் புரிதல் மூலம் இந்தக் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முக்கிய தளமாகப் பணியாற்றியுள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், இந்த ஆலோசனைகள் ஆக்கப்பூர்வமாகவும் தொலைநோக்குடையதாகவும் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு நட்டா, சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் புதிய கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கும் இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்தச் சந்திப்பு பிரதிபலிக்கிறது என்று வலியுறுத்தினார். சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல், அணுகலை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த சுகாதார விளைவுகளுக்காகப் புதுமைகளை ஊக்குவித்தல் ஆகிய பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் சுகாதாரத் துறையில் இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பு வழிநடத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

திரு நட்டா, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பல்வேறு துறைசார் ஈடுபாட்டில் வேரூன்றிய, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் பன்முக உறவை எடுத்துரைத்தார். மேலும், “அனைவருடனும், அனைவரின் வளர்ச்சி” என்ற வழிகாட்டும் கொள்கையின் கீழ் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். சுகாதாரத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்தக் கூட்டுக் குழுக் கூட்டம் ஒரு முக்கிய தளமாக அமைகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் உரையாற்றிய திருமதி ஒனோடா, புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம் சுகாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஜப்பானின் தொடர்ச்சியான ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்தியதோடு, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.

கூட்டுக் குழு கூட்டத்தின் போது, ​​முக்கிய முன்னுரிமைப் பகுதிகள் தொடர்பாக விரிவான விளக்கங்களும் கலந்துரையாடல்களும் நடைபெற்றன:

தொற்றா நோய்களின் (NCDs) தடுப்பு, கண்டறிதல், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு:

இந்தியத் தரப்பு, மாறிவரும் நோய்ப் சுமையை முன்வைத்ததுடன், தொற்றா நோய்களின் அதிகரித்து வரும் பரவலையும் வலியுறுத்தியது. மேலும், நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) இணைந்த, பரிசோதனை, தொடர் சிகிச்சை மற்றும் நீடித்த சுகாதார மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான பதிலளிப்புக் கட்டமைப்பையும் கோடிட்டுக் காட்டியது. ஜப்பானியத் தரப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் நிறுவனத் திறன் மேம்பாட்டின் மூலம் புற்றுநோய் பரிசோதனை, ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திட்டங்கள் உள்ளிட்ட, நடைபெற்று வரும் ஒத்துழைப்பு முயற்சிகளைப் பகிர்ந்துகொண்டது.

விநியோகச் சங்கிலியின் மீள்திறன் மற்றும் உயர்தர மருத்துவப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகல்:

இந்தியத் தரப்பு, தனது மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் துறைகளின் அளவையும் திறனையும் எடுத்துரைத்ததுடன், இலக்கு சார்ந்த கொள்கை நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துதல், சார்புநிலையைக் குறைத்தல் மற்றும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. ஜப்பானியத் தரப்பு, கட்டமைக்கப்பட்ட கூட்டாண்மைகள் மூலம் மருத்துவப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல், மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தனது ஒருங்கிணைந்த பொது-தனியார் ஒத்துழைப்பு மாதிரியைப் பற்றி விரிவாக விளக்கியது.

டிஜிட்டல் சுகாதாரம்:

இந்தியத் தரப்பு, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அணுகுமுறையை கோடிட்டுக் காட்டியது. இது, பயன்பாட்டு ஏற்பு மற்றும் ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன், ஒன்றோடொன்று இயங்கக்கூடிய, பாதுகாப்பான மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட ஒரு டிஜிட்டல் சுகாதாரச் சூழலமைப்பைச் சாத்தியமாக்குகிறது. ஜப்பானியத் தரப்பு, அமைப்பு ஒருங்கிணைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த மருத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தும் கூட்டு ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம் டிஜிட்டல்மயமாக்கலை மேம்படுத்துவதில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது.

மனிதவள மேம்பாடு மற்றும் பரிமாற்றம்:

திறமையான மற்றும் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த சுகாதாரப் பணியாளர்களை ஆதரிக்கும் தனது கொள்கை மற்றும் ஒழுங்குமுறைச் சூழலமைப்பையும், அத்துடன் பரிமாற்றத் திட்டங்கள், கூட்டுப் பயிற்சி மற்றும் பரஸ்பரத் திறன் அங்கீகாரத்திற்கான கட்டமைக்கப்பட்ட வழிமுறைகளையும் இந்தியத் தரப்பு எடுத்துரைத்தது. மருத்துவத் துறையில் கூட்டு ஆராய்ச்சி, பணியாளர் பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு அறிவியல் ஈடுபாடுகளை ஆதரிக்கும் தற்போதைய ஒத்துழைப்புக் கட்டமைப்புகளை ஜப்பானியத் தரப்பு விவரித்தது.

தனது நிறைவுரையில், திரு நட்டா அவர்கள், இந்தக் கலந்தாய்வுகள் இந்தியா-ஜப்பான் சுகாதாரக் கூட்டாண்மைக்கு புது உத்வேகம் அளித்துள்ளதாகவும், முக்கிய முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மீள்திறன் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு இந்தக் கலந்துரையாடல்கள் ஒரு தெளிவான திசையை வகுத்துள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தின் முடிவுகள் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன என்று மேலும் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளின் குடிமக்களுக்கும் பொதுவான நோக்கங்களை அர்த்தமுள்ள விளைவுகளாக மாற்றுவதற்காக ஜப்பானுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஜப்பானின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையில் இந்தியா-ஜப்பான் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான ஜப்பானின் தீர்மானத்தை திருமதி ஒனோடா மீண்டும் வலியுறுத்தினார்.

தங்கள் குடிமக்களுக்குச் சிறந்த சுகாதாரப் பலன்களை அடைவதற்காக, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்த நிலையில், இக்கூட்டம் ஒரு நேர்மறையான குறிப்புடன் நிறைவடைந்தது.

எம்.பிரபாகரன்

Leave a Reply