பாதுகாப்பான சுகாதாரச் சூழல்களை உறுதி செய்வதில் தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் விதமாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து, தொடர்புடைய மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் ஒருங்கிணைந்து, 2026 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை நாடு தழுவிய தீ பாதுகாப்பு வார அனுசரிப்பைத் தொடங்கியது.
மத்திய சுகாதாரச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமையில், “சுகாதார வசதிகளில் தீ பாதுகாப்பு” என்ற கருப்பொருளில் நடைபெற்ற நாடு தழுவிய உறுதிமொழி விழாவுடன் இந்த அனுசரிப்பு தொடங்கி வைக்கப்பட்டது . இவ்விழா, தீ தடுப்பு, தயார்நிலை மற்றும் மீட்பு அமைப்புகளை வலுப்படுத்துவதில் சுகாதார நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுகாதாரச் செயலாளர் திருமதி. புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, இந்த ஆண்டு தீ பாதுகாப்பு வாரத்தின் கருப்பொருளான “பாதுகாப்பான பள்ளிகள், பாதுகாப்பான மருத்துவமனைகள், மற்றும் தீ பாதுகாப்பு விழிப்புணர்வுள்ள சமூகம்: தீ தடுப்பிற்காக ஒன்றிணைந்து” என்பது, நமது நிறுவனங்களுக்குள் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு பகிரப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்பு என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று எடுத்துரைத்தார். தற்போதுள்ள உள்கட்டமைப்பை மறுமதிப்பீடு செய்யவும், வசதிகள் போதுமான அளவு தணிக்கை செய்யப்பட்டுள்ளதா என்பதை மதிப்பிடவும், மேலும் சரிசெய்யப்பட வேண்டிய இடைவெளிகளையும் முரண்பாடுகளையும் கண்டறியவும் தீ பாதுகாப்பு வாரம் ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். திறன் மேம்பாட்டை வலியுறுத்தி, தீ அவசரநிலைகளுக்குத் திறம்பட பதிலளிக்க சுகாதாரப் பணியாளர்களுக்குப் போதுமான பயிற்சியும் விழிப்புணர்வும் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், அனைத்து மாநிலங்களும் சுகாதார வசதிகளும் தீ பாதுகாப்பு தணிக்கை விவரங்களை IHIP இணையதளத்தில் தவறாமல் பதிவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இத்தகைய நடைமுறைகள் இணக்கத்தை நிறுவனமயமாக்கும் என்றும், பாதுகாப்புத் தரங்களைப் பராமரிப்பதற்கான தொடர்ச்சியான நினைவூட்டலாகச் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திவாஹர்
