இந்தியா – கம்போடியா இருதரப்பு ராணுவப் பயிற்சியான சின்பாக்ஸ்-II 2026-இன் இரண்டாவது பதிப்பிற்காக இந்திய ராணுவப் படைப்பிரிவு புறப்பட்டது. இந்தப் பயிற்சியானது, கம்போடியா இராச்சியத்தின் காம்போங் ஸ்பியூ மாகாணத்தில் உள்ள டெச்சோ சென் புனோம் தாம் மிரியாஸ் மாகாண அரச கம்போடிய விமானப்படை பயிற்சி மையத்தில் (கேம்ப் பேசில்) 2026 மே 04 முதல் 17 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நட்பு வெளிநாடுகளுடனான இந்தியாவின் தொடர்ச்சியான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, மாறிவரும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களின் பின்னணியில் கம்போடியாவுடனான இந்த இருதரப்பு சின்பாக்ஸ்-II பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் பயிற்சியானது ஐ.நா. ஆணையின் ஏழாம் அத்தியாயத்தின் கட்டமைப்பின் கீழ் நடத்தப்படும், இது மரபுசாரா சூழலில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கம்பெனி அளவிலான கூட்டுப் பயிற்சியை வெளிப்படுத்தும்.
இந்திய இராணுவக் குழுவில் 120 வீரர்கள் உள்ளனர், இவர்கள் பெரும்பாலும் மராத்தா இலகு காலாட்படைப் படைப்பிரிவின் ஒரு பட்டாலியனைச் சேர்ந்தவர்கள். கம்போடியக் குழுவில் 160 வீரர்கள் உள்ளனர், இவர்கள் கம்போடிய அரச இராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கூட்டுப் பயிற்சியானது, ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கையின் போது, அமைதி காக்கும் படைகள் எதிர்கொள்ளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தற்போதைய இயக்கவியலுடன் சீரமைக்கப்படும். பல்வேறு நடைமுறை மற்றும் விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் தந்திரோபாயப் பயிற்சிகள் மூலம் இந்த நோக்கம் அடையப்படும், இது ஒரு முழுமையான சரிபார்ப்புப் பயிற்சிக்கு வழிவகுக்கும். இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, ட்ரோன் செயல்பாடுகள், மோர்டார் மற்றும் குறி பார்த்துச் சுடும் தந்திரோபாயங்கள் உள்ளிட்ட சிறப்புத் திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். இரு நாடுகளின் படைப்பிரிவுகளுக்கு இடையே இயங்குதிறன், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு ஒத்திசைவை மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இந்தப் பயிற்சியானது, உலக அமைதியைப் பேணுவதில் இரு நாடுகளின் திறனை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, பகுதி நகர்ப்புறச் சூழலில் பகை சக்திகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளின் போது பெறப்பட்ட சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், செயல்பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் வழிவகுக்கும்.
சின்பாக்ஸ்-II 2026 கூட்டு ராணுவப் பயிற்சியானது, இந்தியா – கம்போடியா இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதோடு, பிராந்திய பாதுகாப்பு சவால்களைக் கையாள்வதில் பரஸ்பர புரிதலுக்குப் பங்களிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும்.
திவாஹர்
