பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் அவர்கள், பாதுகாப்பு எஸ்டேட்ஸ் தலைமை இயக்குநர் திருமதி ஷோபா குப்தா மற்றும் பிற முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில், டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள கண்டோன்மென்ட் பொது மருத்துவமனையில் ரோபோடிக் எலும்பியல் அமைப்பு மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கத்தை ஏப்ரல் 23, 2026 அன்று திறந்து வைத்தார். இந்த வசதிகள், கண்டோன்மென்ட் மற்றும் அருகிலுள்ள நகராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்க உதவும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புச் செயலாளர், இராணுவப் பாசறைகளில் சுகாதார உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, அங்கு வசிப்பவர்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகளை உறுதி செய்வதில் அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார்.
படம்.jpeg
பாதுகாப்பு எஸ்டேட்ஸ் தலைமை இயக்குநர் இந்த முன்னெடுப்பைப் பாராட்டியதோடு, இத்தகைய மேம்பாடுகள் பாசறைப் பகுதிகளுக்குள் சுகாதார சேவை வழங்கும் அமைப்புகளைக் கணிசமாக வலுப்படுத்தி, ஒட்டுமொத்த சமூக நலனுக்கும் பங்களிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோடிக் எலும்பியல் அமைப்பு ஒரு பெரிய தொழில்நுட்ப மேம்பாட்டைக் குறிக்கிறது. இது துல்லியமான அறுவை சிகிச்சைகளைச் சாத்தியமாக்குவதோடு, குணமடையும் நேரத்தைக் குறைத்து, நோயாளிகளின் நலனையும் மேம்படுத்துகிறது. அதிநவீன ரோபோடிக் அமைப்புடன் கூடிய இந்த அலகு, சிக்கலான எலும்பியல் நோய்களை அதிகத் துல்லியத்துடனும் செயல்திறனுடனும் கையாள்வதில் மருத்துவமனையின் திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கம், கருவுற்ற தாய்மார்களுக்கு விரிவான மற்றும் பாதுகாப்பான அறுவை சிகிச்சை சேவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கண்டோன்மென்ட் பொது மருத்துவமனையில் அடுத்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ள டயாலிசிஸ் மையம், மத்திய கிருமி நீக்க சேவைகள் துறை (CSSD), தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மேம்பாடுகள் மற்றும் ஆய்வக விரிவாக்கம் உள்ளிட்ட திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்தும் ஒரு சுருக்கமான விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது. மேலும், அடுத்த ஒரு வருடத்தில், சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு (Paediatric ICU), பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு (Neonatal ICU), CT ஸ்கேன், MRI, புற்றுநோய் கண்டறியும் பிரிவு, உயர் சார்புப் பிரிவு (High Dependency Unit), பல்நோக்கு சிறப்புப் பிரிவு (Multispecialty Ward) மற்றும் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவு (Surgical ICU) போன்ற வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
