இந்தியத் துணை குடியரசுத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று புது தில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற 18வது குடிமைப் பணிகள் தின விழாவில் சிறப்புரை ஆற்றினார்.
தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த துணை குடியரசுத் தலைவர், நாடு முழுவதும் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவர்களது ஓய்வுபெற்ற சக ஊழியர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல், டெல்லியில் நிர்வாக சேவைப் பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றி 79 ஆண்டுகள் ஆகின்றன என்றும், அப்போது அவர் அரசு ஊழியர்களை “இந்தியாவின் எஃகுச் சட்டகம்” என்று வர்ணித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். அடுத்தடுத்து வந்த அதிகாரிகள் குழுக்கள், தேசத்தின் முன்னேற்றம் மற்றும் செழிப்பு நோக்கிய பயணத்தில் அதன் முதுகெலும்பாகச் செயல்பட்டு, இந்த மரபைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வந்துள்ளனர் என்று துணை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். மாநிலங்கள் முழுவதும் பணியாற்றும் அரசு ஊழியர்களை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையின் மாபெரும் தூதர்கள் என்று அவர் வர்ணித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கடந்த பத்தாண்டுகளில் எட்டப்பட்ட மகத்தான முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட துணை குடியரசுத் தலைவர், “அனைவருடனும், அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் பிரார்த்தனை” என்ற வழிகாட்டும் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார். ஏறக்குறைய 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டது, ஏழைகளுக்காக 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டது, மற்றும் எல்லைப்புற கிராமங்கள் துடிப்பான சமூகங்களாக மேம்படுத்தப்பட்டது உள்ளிட்ட முக்கிய சாதனைகளை அவர் சுட்டிக்காட்டினார். லட்சபதி தீதிகள் மற்றும் நமோ ட்ரோன் தீதிகள் போன்ற முன்னெடுப்புகளின் ஆதரவுடன், பெண்கள் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், லட்சிய மாவட்டங்கள் திட்டம் மற்றும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு தயாரிப்பு போன்ற முதன்மைத் திட்டங்களையும் அவர் குறிப்பிட்டதோடு, எந்தவொரு மாநிலமோ அல்லது மாவட்டமோ பின்தங்கிவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
அரசு கொள்கைகளை உண்மையாகச் செயல்படுத்துபவர்கள் அரசு ஊழியர்கள் என அவர்களைப் பாராட்டிய அவர், இந்தச் சாதனைகளுக்கு அவர்களின் அர்ப்பணிப்பே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்றார். ‘அனைவருடனும், அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் பிரார்த்தனை’ என்ற கொள்கையை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ‘விக்ஷித் பாரத் @2047’ இலக்கை நோக்கிய பயணத்தில் இந்தியா இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று துணை ஜனாதிபதி அடிக்கோடிட்டுக் காட்டினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்ய, தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் இறுதிக்கட்டச் சேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்திய அவர், எந்தவொரு குடிமகனும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்வது அரசு ஊழியர்களின் பொறுப்பு என்பதை வலியுறுத்தினார்.
திவாஹர்
