ஆயுஷ் துறையில் கொள்கை, நிர்வாகம் மற்றும் செயலாக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு விரிவான தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தின் வெற்றிகரமான நிறைவைக் குறிக்கும் வகையில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் (தனிப் பொறுப்பு) இணை அமைச்சரும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சருமான திரு. பிரதாப்ராவ் ஜாதவ் அவர்கள், இன்று புது தில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் ‘ சிந்தன் ஷிவிர்–2026’ நிறைவு அமர்வுக்குத் தலைமை தாங்கினார் .
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், இந்த முகாமின் போது நடைபெற்ற அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் குறித்து திருப்தி தெரிவித்ததோடு, ஆயுஷ் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் அரசின் கூட்டுப் பார்வை, அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டின் வலுவான பிரதிபலிப்பாக இந்த முகாம் உருவெடுத்துள்ளது என்றும் வலியுறுத்தினார். ஆயுஷ் என்பது வெறும் ஒரு சிகிச்சை முறை மட்டுமல்ல, அது ஒரு முழுமையான உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை அணுகுமுறை என்றும், நவீன சுகாதார சவால்களுக்கும், குறிப்பாக வாழ்க்கை முறை தொடர்பான நோய்களுக்கும் தீர்வுகளை வழங்குகிறது என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஒருங்கிணைந்த மற்றும் பல்துறை அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய திரு. ஜாதவ், ஆயுஷ் தொழில்நுட்பத்தை பிரதான சுகாதார அமைப்புகளுடன் நிறுவன ரீதியாக ஆழமாக ஒருங்கிணைக்கவும், சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சியை வலுப்படுத்தவும், குறிப்பாக கிராமப்புறங்களில் அணுகலை மேம்படுத்துவதற்காக ஆயுஷ் கிரிட் மற்றும் டெலிமெடிசின் போன்ற டிஜிட்டல் சுகாதார தளங்களில் அதிக கவனம் செலுத்தவும் அழைப்பு விடுத்தார். மேலும், இத்துறையின் முழு ஆற்றலையும் வெளிக்கொணரவும், ‘ விக்ஷித் பாரத் 2047’ தொலைநோக்குப் பார்வைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் தொழில்முனைவு, புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார் .
நிகழ்ச்சியின் இரண்டாம் நாள், பொது சுகாதாரத்தில் ஆயுஷ் திட்டத்தை வலுப்படுத்துவதற்கான கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திய ஒரு சுவாரஸ்யமான அமர்வுடன் தொடங்கியது . டாக்டர் ஏ. ரகு அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட இந்த அமர்வில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, நிதி அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வினோத் பால், மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் திருமதி பிரீத்தி சுதன் உள்ளிட்ட துறைத் தலைவர்கள் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கனிவுடன் கலந்துகொண்டனர்.
டாக்டர் வினோத் பால், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் விஷன் 2047 இலக்குகளை அடைவதற்காக, ஆயுஷ் மருத்துவத்தை நவீன மருத்துவத்துடன் தடையின்றி ஒருங்கிணைத்து, தடுப்பு மற்றும் முழுமையான சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிப்பதை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த சுகாதாரத்திற்கான ஒரு தேசிய தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டினார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, தொற்றா நோய்கள், மனநலம் மற்றும் தாய்-சேய் நலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் போன்ற தேசிய திட்டங்களில் ஆயுஷை ஒருங்கிணைப்பதற்கான உத்திகளை, ABHA ID மூலமான டிஜிட்டல் இடைசெயல்திறனின் ஆதரவுடன் எடுத்துரைத்தார். திருமதி பிரீத்தி சுதன், ஒருங்கிணைப்பு மற்றும் கொள்கைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்த தனது கருத்துக்களை வழங்கினார். இந்த அமர்வு, கொள்கை ஒருங்கிணைப்பு, சேவைகளை ஒரே இடத்தில் அமைத்தல், டிஜிட்டல் சுகாதாரத்தை ஏற்றுக்கொள்வது, ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் மற்றும் இறுதிக்கட்ட சேவை வழங்கல் ஆகியவற்றின் மூலம், கவனிப்பின் அணுகல், தொடர்ச்சி மற்றும் தரத்தை மேம்படுத்துவதை வலியுறுத்தியது.
ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர், வைத்திய ராஜேஷ் கோடேச்சா, தனது உரையில், சிந்தன் ஷிவிர் கூட்டானது கூட்டு சுயபரிசோதனை, கொள்கை மறுஆய்வு மற்றும் எதிர்கால செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு தளமாக அமைந்தது என்று குறிப்பிட்டார். ஆராய்ச்சியை வலுப்படுத்துதல், தரப்படுத்துதல் மற்றும் உலகளாவிய நம்பகத்தன்மை ஆகியவற்றில் தெளிவான ஒருமித்த கருத்து நிலவியதாகவும், அதே நேரத்தில், குறிப்பாக டிஜிட்டல் தளங்கள் மூலம் திறம்பட்ட தகவல் தொடர்பு மற்றும் பொதுமக்களிடம் சென்றடைவதன் முக்கியத்துவத்தையும் இந்தக் கலந்துரையாடல்கள் வலியுறுத்தியதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
சிவிர் ஆய்வின் முடிவுகள், ஆயுஷ் சூழலமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான காலவரையறைக்குட்பட்ட, செயல்படுத்தக்கூடிய உத்திகளுக்கு வழிகாட்டும் என்று அவர் தெரிவித்தார்.
இரண்டு நாள் மாநாட்டின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்த விரிவான விளக்கத்தை, ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அலர்மெல்மங்கை டி வழங்கினார். அதில், அனைத்து அமர்வுகளிலிருந்தும் பெறப்பட்ட முக்கியப் புரிதல்களையும், செயல்படுத்தக்கூடிய படிப்பினைகளையும் அவர் தொகுத்துரைத்தார்.
ஆயுஷ் துறையில் கொள்கை வழிகாட்டுதல், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய அணுகுமுறையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு பிரதாப்ராவ் ஜாதவ் அவர்களால், இந்த ஷிவிர் 2026 ஏப்ரல் 16 அன்று திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வின் போது தொடங்கப்பட்ட முக்கிய முன்னெடுப்புகளில் பின்வருவன அடங்கும்:
ஆயுஷ் சிகிச்சைகளுக்கான காப்பீட்டு வரம்பை விரிவுபடுத்துவதற்காக, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்திற்கும் பொதுக் காப்பீட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டது
ஆயுஷ் காப்பீட்டிற்கான அளவுகோல் கட்டணங்கள் ஆவணம் வெளியிடப்பட்டது
ஆயுஷ் காப்பீட்டு ஆதரவிற்காக 1800-11-0008 என்ற கட்டணமில்லா எண் தொடங்கப்பட்டது.
“தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாடு” குறித்த ஐந்தாவது அமர்வு, கட்டமைக்கப்பட்ட கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் ஆளுகையை மாற்றுவதில் மிஷன் கர்மயோகியின் பங்கை எடுத்துரைத்தது.
ஆர். பால சுப்ரமணியம் மற்றும் தீபா கிருஷ்ணன் ஆகியோர், iGOT போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலமான தொடர் கற்றல், தலைமைத்துவ மேம்பாடு மற்றும் துறை சார்ந்த பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். வலுவான தலைமைத்துவம், தகவல் தொடர்பு மற்றும் நிர்வாகத் திறன்களைக் கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாரான ஆயுஷ் பணியாளர்களை உருவாக்குவதன் அவசியத்தை இந்த அமர்வு வலியுறுத்தியது.
பொதுமக்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக, ஊடகத் தொடர்பு மற்றும் வர்த்தக முத்திரை உத்திகளை வலுப்படுத்துவதில் ஆறாவது அமர்வு கவனம் செலுத்தியது.
யஷ்வந்த் தேஷ்முக், ராகுல் திவான், மற்றும் பிரபல் பிரதாப் சிங் உள்ளிட்ட வல்லுநர்கள், ஆயுஷை ஆதார அடிப்படையிலான ஒரு பிரதான சுகாதார அமைப்பாக நிலைநிறுத்துவதற்காக, தரவு சார்ந்த தகவல் தொடர்பு, கதை சொல்லல் மற்றும் டிஜிட்டல் ஈடுபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
அடிமட்ட அளவில் தெரிவுநிலை, நம்பிக்கை மற்றும் ஏற்புத்தன்மையை மேம்படுத்துவதற்கு, சமூக ஊடகங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பன்முக வழிப் பிரச்சாரங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அமர்வு எடுத்துக்காட்டியது.
இரண்டு நாள் சிந்தன் ஷிவிர்–2026 நிகழ்வானது, கல்வி, ஆராய்ச்சி, சேவை வழங்கல், சட்டரீதியான தயார்நிலை, டிஜிட்டல்மயமாக்கல், தொழில்முனைவு மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை வெற்றிகரமாக ஒன்றிணைத்தது.
2047-ஆம் ஆண்டிற்குள் ஆரோக்கியமான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை அடைவதில் ஆயுஷ் துறையின் பங்கை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும், கூட்டுறவு, சான்றுகள் அடிப்படையிலான மற்றும் செயல் சார்ந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கான ஒருமித்த தீர்மானத்துடன் இந்த முகாம் நிறைவடைந்தது.
திவாஹர்
