மத்தியப் பிரதேசத்தின் தார் மற்றும் கார்கோன் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், புது தில்லியில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹானை சந்தித்து, தரமற்ற விதைகள் மற்றும் நாற்றுகள் வழங்கப்பட்டதால் தங்களது பாகற்காய் பயிரில் ஏற்பட்ட கடுமையான இழப்புகள் குறித்து அவரிடம் தெரிவித்தனர். இப்பிரச்சனையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று விவரித்த திரு சௌஹான், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதையும், இதற்குப் பொறுப்பான நிறுவனம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார்.
மத்திய அமைச்சரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, விரைவான நிர்வாக நடவடிக்கை தொடங்கப்பட்டது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த நன்ஹெம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக, தார் மாவட்டத்தின் மனாவர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனும் ஆர்வமுமே தனது முதன்மையான முன்னுரிமை என்று மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். புது தில்லியில் அவரைச் சந்தித்த தார் மற்றும் கார்கோன் பகுதி விவசாயிகள், தரமற்ற விதைகள் மற்றும் நாற்றுகள் காரணமாக பாகற்காய் பயிரில் தங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த திரு சௌஹான், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவர்களுக்குப் போதுமான இழப்பீடு பெற்றுத் தர உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் பங்கு வகித்துள்ள நிறுவனத்தின் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெளிவாக உத்தரவிட்டார். இந்த உத்தரவுகளுக்குப் பிறகு, நிர்வாக மட்டத்தில் நடவடிக்கை வேகம் பெற்றதுடன், தார் மாவட்டத்தின் மனாவர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை எண் 266 பதிவு செய்யப்பட்டது.
பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன் பிரிவுகள் 318(4) மற்றும் 324(5), அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955-இன் பிரிவுகள் 3 மற்றும் 7, மற்றும் விதைகள் சட்டம், 1966-இன் பிரிவு 19 ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா, ஹைதராபாத்தைச் சேர்ந்த நுன்ஹெம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கும், தரம் குறைந்த மற்றும் போலி விதைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வேளாண் உள்ளீடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உண்மையான நிவாரணம் தாமதமின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்கும் ஆதரவாக, மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் கடந்த காலத்திலும் தொடர்ந்து தெளிவான மற்றும் உறுதியான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். தரம் குறைந்த விதைகள் மற்றும் பிற வேளாண் உள்ளீடுகள் தொடர்பான விஷயங்களில், விவசாயிகளின் கடின உழைப்பு, பயிர்கள் மற்றும் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தப்பிக்க விடப்பட மாட்டார்கள் என்பதை சௌஹான் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தார்-கார்கோன் வழக்கில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, முறைகேடுகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்கும், வேளாண் உள்ளீடுகள் விநியோகச் சங்கிலியில் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் வெளிப்படுத்திய உறுதிப்பாட்டிற்கு மற்றொரு உதாரணமாகக் கருதப்படுகிறது. பயிர் வெற்றி, குடும்ப வருமானம் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக விவசாயிகள் இத்தகைய உள்ளீடுகளைப் பெரிதும் சார்ந்திருப்பதால், விதைகள் மற்றும் நடவுப் பொருட்களில் தர உறுதிப்பாட்டின் முக்கியத்துவத்தையும் இந்த வழக்கு எடுத்துக்காட்டியுள்ளது. தரத்தில் ஏற்படும் எந்தவொரு சமரசமும் உற்பத்தியைப் பாதிப்பது மட்டுமல்லாமல், கிராமப்புறக் குடும்பங்களைப் பொருளாதார ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
எம்.பிரபாகரன்
