இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ். சுதர்ஷினி, லோகாயன் 26 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கடல்கடந்த பயணத்தின் ஒரு பகுதியாக, 15 ஏப்ரல் 2026 அன்று மொராக்கோவின் காசாபிளாங்கா துறைமுகத்தில் நங்கூரமிட்டது. இந்த முக்கியத் துறைமுகத்திற்கு கப்பலின் வருகையானது, இப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதோடு, மகாசாகர் (பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, கடல்சார் ஈடுபாட்டை மேம்படுத்துவதில் இந்தியக் கடற்படையின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது . இந்தப் பயணம், இந்தியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் கடற்படை ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துகிறது.
வந்தடைந்ததும், ஐஎன்எஸ் சுதர்ஷினியின் கட்டளை அதிகாரி, மொராக்கோ கடற்படையின் மத்திய கடல்சார் பிரிவின் தளபதியான கமாண்டர் ஹசன் அகோலி மற்றும் மொராக்கோவின் ராயல் கடற்படைப் பள்ளியின் இயக்குநரான கமாண்டர் உமர் நஸ்ரி ஆகியோரைச் சந்தித்தார். இரு கடற்படைகளுக்கும் இடையே மேம்படுத்தப்பட்ட கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிப் பரிமாற்றங்களுக்கான வழிகளை ஆராய்வதில் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின.
மூன்று நாள் பயணத்தின் போது , ஐஎன்எஸ் சுதர்ஷினியின் குழுவினர், மொராக்கோ அரச கடற்படையினருடன் கலந்துரையாடுவார்கள், மூத்த அதிகாரிகளையும் சிறப்பு விருந்தினர்களையும் கப்பலில் உபசரிப்பார்கள், மேலும் கடற்படை ஒத்துழைப்பு, தூதரக உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொழில்முறை மற்றும் கலாச்சார கலந்துரையாடல்களில் பங்கேற்பார்கள். இந்தப் பயணம், குழுவினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் மதிப்புமிக்க அனுபவத்தை வழங்குவதோடு, இந்தியாவின் விரிவடைந்து வரும் கடல்சார் ஈடுபாடு, சர்வதேசத் தொடர்பு மற்றும் கடற்பயணத் திறமை ஆகியவற்றையும் எடுத்துக்காட்டுகிறது.
கடந்த ஆண்டில், ஐஎன்எஸ் தபார், ஐஎன்எஸ் தர்காஷ், ஐஎன்எஸ் சுமேதா மற்றும் ஐஎன்எஸ் துஷில் ஆகிய நான்கு இந்திய கடற்படைக் கப்பல்கள் காசாபிளாங்காவிற்கு வருகை தந்து, பரஸ்பர நம்பிக்கையையும் ஒருங்கிணைந்த செயல்பாட்டையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . மேலும், மொராக்கோ அரச கடற்படையின் ஆய்வாளர் ரியர் அட்மிரல் முகமது தாஹின், தனது இந்திய அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 2025-ல் இந்திய கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையகத்திற்கு வருகை தந்திருந்தார்.
ஐஎன்எஸ் சுதர்ஷினி வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் வழிகள் மற்றும் சர்வதேச கடல்வழிப் பாதைகள் வழியே தனது பயணத்தைத் தொடரும் வேளையில், இந்தப் பயணம் வசுதைவ குடும்பகம் என்ற தத்துவத்தை ஊக்குவிப்பதோடு , உலகளாவிய கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துகிறது.
எம் . பிரபாகரன்
