இந்தியப் பெருங்கடல் கப்பலான (IOS) சாகர் , மாலத்தீவின் மாலேயிலிருந்து ஆறு நாள் பயணத்தை நிறைவுசெய்து , 14 ஏப்ரல் 2026 அன்று தாய்லாந்தின் பூக்கெட்டை வந்தடைந்தது. இது, அதன் தற்போதைய பயணத்தின் இரண்டாவது துறைமுக வருகையாகும்.
16 நட்பு வெளிநாடுகளைச் (FFCs) சேர்ந்த பன்னாட்டுப் பணியாளர்களைக் கொண்ட IOS SAGAR-INS சுனய்னா, மகாசாகர் (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் வகையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மார்ச் 2026-ல் தொடங்கிய IOS SAGAR-இன் தற்போதைய பதிப்பானது, இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் (IONS) தலைவராக இந்தியாவின் தலைமைப் பங்கையும் பிரதிபலிக்கிறது.
பூக்கெட் துறைமுகத்தில் கப்பல் தங்கியிருக்கும் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஐஓஎஸ் சாகர் கப்பல் தாய்லாந்து அரச கடற்படையுடன் (RTN) தொழில்முறை கலந்துரையாடல்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. தோழமையையும் மக்களுக்கிடையேயான தொடர்பையும் வளர்ப்பதற்காக பல்வேறு சமூக, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
கப்பலின் வருகையானது , தாய்லாந்தின் பாரம்பரிய புத்தாண்டான சோங்கிரான் பண்டிகையுடன் ஒத்துப்போவதால், பங்கேற்கும் கடற்படைகளுக்கு இடையே கலாச்சாரப் பரிமாற்றங்களை வலுப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
மாலேயிலிருந்து பயணித்தபோது, சர்வதேசக் குழுவினர் கூட்டுத் தயார்நிலை, ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் , கப்பல் ஓட்டும் திறன்கள் மற்றும் செயல்பாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட கடல்சார் பயிற்சி நடவடிக்கைகளைக் கடலில் மேற்கொண்டனர் . இந்தப் பணியமர்த்தல், கடல்சார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் திறன் மேம்பாட்டிற்கும் இந்தியக் கடற்படையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இதன் மூலம் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது.
ஐஓஎஸ் சாகர் நீர்மூழ்கிக் கப்பல், 2026 ஏப்ரல் 02 அன்று மும்பையிலிருந்து மாண்புமிகு பாதுகாப்பு மாநில அமைச்சர் திரு. சஞ்சய் சேத் அவர்களால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐஓஎஸ் சாகர் கப்பலில் உள்ள இந்தியக் கடற்படைக் குழுவினருடன், 16 நட்பு வெளிநாடுகளைச் சேர்ந்த 38 பணியாளர்களும் மாலே, புக்கெட், ஜகார்த்தா, சிங்கப்பூர், யாங்கூன், சிட்டகாங் மற்றும் கொழும்பு ஆகிய துறைமுகங்களுக்குச் செல்வார்கள்.
இந்த முன்னெடுப்பு, ‘ ஒரே பெருங்கடல், ஒரே பணி’ என்ற தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கி , கடல்சார் பங்காளிகளிடையே ஆழமான ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் வளர்க்கிறது.
எம்.பிரபாகரன்
