சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் நடைமுறை சைபர் பாதுகாப்புத் திறன்கள் ஆகியவற்றில் மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து அவர்களை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தேசிய மாணவர் படை (NCC), தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (NIELIT) இணைந்து ஒரு விரிவான சைபர் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. NCC-யின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் NIELIT-இன் தலைமை இயக்குநர் டாக்டர் மதன் மோகன் திரிபாதி ஆகியோர் முன்னிலையில், NCC மற்றும் NIELIT-க்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். முதல் கட்டமான, இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம் என்பது , எண்ணிமக் கல்வி, பாதுகாப்பான இணையப் பழக்கவழக்கங்கள், இணைய சுகாதாரம் மற்றும் இணைய அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படை அறிவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட 15 மணி நேர இணையவழிப் பயிற்சித் தொகுதியாகும். இந்தக் கட்டம், நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட அனைத்து என்.சி.சி. மாணவர்களுக்கும் திறந்திருக்கும், மேலும் இது நீலிட் எண்ணிமப் பல்கலைக்கழகத் தளம் வழியாக வழங்கப்படும்.
இரண்டாம் கட்டமான சைபர் டிஃபெண்டர் திட்டம் என்பது , தகுதி அடிப்படையிலான தேர்வுச் செயல்முறையின் மூலம் தகுதிபெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட கேடட்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தீவிரமான 60 மணி நேர நேரடிப் பயிற்சியாகும். இந்தக் கட்டம், நேரடிப் பயிற்சி, நிஜ வாழ்க்கை உருவகப்படுத்துதல்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு கருவிகள் மற்றும் நுட்பங்களில் நடைமுறை அனுபவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இதன் மூலம் கேடட்கள் சைபர் அச்சுறுத்தல்களைத் திறம்பட அடையாளம் கண்டு பதிலளிக்க இயலும்.
இந்த முன்னெடுப்பின் நோக்கம், அடிமட்ட அளவில் இணைய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், பாதுகாப்பான டிஜிட்டல் நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், இணையப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பங்களிக்கக்கூடிய, பயிற்சி பெற்ற என்.சி.சி சைபர் கேடட்களின் ஒரு குழுவை உருவாக்குவதாகும். மேலும், இந்தத் திட்டம் டிஜிட்டல் இந்தியா மற்றும் தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (NSQF) ஆகியவற்றின் கீழ் உள்ள தேசிய முன்னுரிமைகளுடன் தன்னை இணைத்துக்கொள்ளவும் முயல்கிறது.
திவாஹர்
