வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் 2.97 கோடி பயணிகளாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் 3.98 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட 34 சதவீதம் வலுவான வளர்ச்சியாகும். இந்தத் திடீர் உயர்வு, நாடு முழுவதும் உள்ள பயணிகளிடையே வேகமான, வசதியான மற்றும் நவீன ரயில் பயணத்திற்கான விருப்பம் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டதிலிருந்து, 1 லட்சம் பயணங்கள் மூலம் 9.1 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்குச் சேவை செய்துள்ளது. இது பரவலான பொது நம்பிக்கையையும் தொடர்ச்சியான தேவையையும் பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட அரை அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம், இந்திய ரயில்வே பயணிகள் பயணத்திற்குத் தொடர்ந்து புதிய வரையறைகளை வழங்கி வருகிறது. 2019 பிப்ரவரியில் புது தில்லி–வாரணாசி வழித்தடத்தில் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் வேகம், வசதி மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் ஒரு நாடு தழுவிய வலையமைப்பாக வளர்ந்துள்ளது.
புது தில்லி–வாரணாசி வழித்தடம் மிகவும் பரபரப்பான வழித்தடமாகத் திகழ்கிறது, இதுவரையில் 73 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளைப் பதிவு செய்துள்ளது. புது தில்லி–ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா வழித்தடம் ஏறத்தாழ 56 லட்சம் பயணிகளுக்குச் சேவை செய்துள்ளது, இது புனித யாத்திரைப் பயணத்திற்கு அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தென்னிந்தியாவில், செகந்திராபாத்–விசாகப்பட்டினம் வழித்தடம் 48 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளுக்குச் சேவை செய்துள்ளது, அதே நேரத்தில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் (சென்னை)–மைசூரு வழித்தடம் 36 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளுக்குச் சேவை செய்துள்ளது, இது வலுவான பிராந்தியத் தேவையைப் பிரதிபலிக்கிறது. இந்தச் சேவைகள் சுற்றுலாவின் முக்கிய உந்துசக்திகளாகவும் உருவெடுத்துள்ளன; இவை முக்கிய மத, கலாச்சார மற்றும் கடலோர இடங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதோடு, உள்ளூர் பொருளாதாரங்களையும் பார்வையாளர்களின் வருகையையும் அதிகரிக்கின்றன.
தொலைதூர இணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே 2026 ஜனவரியில் வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவையை அறிமுகப்படுத்தியது. செயல்பாட்டிற்கு வந்த முதல் மூன்று மாதங்களிலேயே, இந்தச் சேவை 119 பயணங்களில் 1.21 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றதுடன், 100 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பிய விகிதத்தையும் எட்டியது. இது, உயர்தர இரவு நேர ரயில் பயணத்தின் மீதான வலுவான தேவையையும், பயணிகளின் அதிகரித்து வரும் நம்பிக்கையையும் சுட்டிக்காட்டுகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், புதுமை, பயணிகளை மையமாகக் கொண்ட சேவை மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் இந்திய ரயில்வேயின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது. பெருநகரங்கள், புனித யாத்திரைத் தலங்கள், பாரம்பரிய நகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார மையங்களை இணைக்கும் தொடர்ச்சியான விரிவாக்கம் மற்றும் படுக்கை வசதி கொண்ட ரயில் சேவையின் அறிமுகம் ஆகியவற்றின் மூலம், இந்திய ரயில்வே வேகமான, பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான பயணங்களை வழங்குவதை நோக்கி சீராக முன்னேறி வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், இந்தியாவில் நவீன ரயில் பயணத்தின் மாற்றத்திற்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா
