இந்தியத் துணை குடியரசுத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று உப்ரஷ்டிரபதி பவனில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், இந்திய அரசியலமைப்பின் சமீபத்திய பதிப்பை சிந்தி மொழியில், தேவநாகரி மற்றும் பாரசீக எழுத்து வடிவங்களில் வெளியிட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய துணை ஜனாதிபதி, சிந்தி மொழி தினத்தை முன்னிட்டு சிந்தி மொழி பேசும் சமூகத்தினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சிந்தி மொழியை மிகப் பழமையான மற்றும் இனிமையான மொழிகளில் ஒன்று என வர்ணித்த அவர், அதன் இலக்கிய மரபு வேதாந்தத் தத்துவம் மற்றும் சூஃபி சிந்தனையின் தனித்துவமான சங்கமத்தைப் பிரதிபலிப்பதாகவும், ஒற்றுமை, அன்பு மற்றும் சகோதரத்துவம் போன்ற உலகளாவிய விழுமியங்களை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக சிந்தி மொழியில், குறிப்பாக தேவநாகரி எழுத்துருவில் அரசியலமைப்பு வெளியிடப்படுவது, மொழியளவிலான அனைவரையும் உள்ளடக்குதலை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று கூறினார். அரசியலமைப்பு என்பது வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல, அது தேசத்தின் அபிலாஷைகளை உள்ளடக்கி, உரிமைகளைப் பாதுகாத்து, ஜனநாயக ஆட்சிக்கு வழிகாட்டும் அதன் உயிருள்ள ஆன்மா என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அரசியலமைப்பைப் பல இந்திய மொழிகளில் அணுகும்படி செய்த முயற்சிகளைத் துணை ஜனாதிபதி பாராட்டினார். இத்தகைய முன்னெடுப்புகள், மக்கள் தங்கள் தாய்மொழியில் அரசியலமைப்பைப் புரிந்துகொள்ள உதவுவதன் மூலம், குடிமக்களுக்கும் ஆட்சிக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுவதாகவும், அதன்மூலம் ஜனநாயகப் பங்கேற்பையும் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு மொழிகளில் தனது அரசியலமைப்பை வழங்குவதில் இந்தியா தனித்துவமாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்ட அவர், போடோ, டோக்ரி, சந்தாலி, தமிழ், குஜராத்தி மற்றும் நேபாளி மொழிகளில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகள் உட்பட, சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற முயற்சிகளை நினைவு கூர்ந்தார். இந்த முயற்சிகள் இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதோடு, ஜனநாயக விழுமியங்களையும் வலுப்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.
சிந்தி சமூகத்தின் வரலாற்றுப் பயணத்தை நினைவுகூர்ந்த துணை ஜனாதிபதி, பிரிவினைக்குப் பிந்தைய கடினமான காலங்களில் அம்மொழி மீள்திறன் மற்றும் ஒற்றுமையின் சின்னமாக விளங்கியது என்று குறிப்பிட்டார். அதன் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரித்து, எதிர்கால சந்ததியினருக்காக அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 1967 ஆம் ஆண்டு 21வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சிந்தி மொழி அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
அனைத்து மொழிகளையும் மதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஒவ்வொரு தனிநபரும் தமது தாய்மொழியைப் போற்றி மதிக்கும் அதே வேளையில், அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றார். இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் அடங்கியுள்ளது என்றும், மொழிகள் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் இன்றியமையாத ஊடகங்களாகத் திகழ்கின்றன என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அரசியலமைப்பை பிராந்திய மொழிகளில் அணுகும்படி செய்ததற்காக, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின், குறிப்பாக பிராந்திய மொழி அதிகாரிகளின் முயற்சிகளைத் துணை ஜனாதிபதி பாராட்டினார். இத்தகைய முன்னெடுப்புகள் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், 2047-ஆம் ஆண்டிற்குள் விக்ஸித் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வையும், ‘தேசமே முதன்மை – ராஷ்டிர பிரதம்’ எனும் வழிகாட்டும் கொள்கையையும் மீண்டும் வலியுறுத்திய அவர், குடிமக்கள் தங்கள் தாய்மொழிகளையும் தேசத்தின் கூட்டு மொழிப் பாரம்பரியத்தையும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால்; ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் திரு வாசுதேவ் தேவ்நானி; மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சங்கர் லால்வானி; மற்றும் சட்டமன்றத் துறை செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி ஆகியோருடன் பிற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
திவாஹர்
