மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, புது தில்லியில் நடைபெற்ற ‘விஸ்வ நவகர் மகாமந்திர தினம்’ நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறுகையில், உலகின் பல்வேறு பகுதிகளில் தத்தமது சித்தாந்தங்களை நிலைநாட்டும் முயற்சிகளில் மோதல்கள் நிலவி வரும் இவ்வேளையில், ஒட்டுமொத்த உலக நலனுக்காக இங்கு நவகார் மந்திரம் கூட்டாக உச்சரிக்கப்படுவது மிகவும் அர்த்தமுள்ளதாகவும் பொருத்தமானதாகவும் உள்ளது என்றார். இந்தியா பல்வேறு பிரிவுகள் மற்றும் மதங்களைக் கொண்ட நாடு என்றும், இங்குள்ள ஒவ்வொரு பாரம்பரியமும் மந்திரங்களின் சிறப்பு முக்கியத்துவத்தையும் ஆன்மீக சக்தியையும் எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
மந்திரங்கள் மனித வாழ்க்கையை ஒரு உயர்ந்த பாதைக்கு வழிநடத்துகின்றன, நமது உணர்வைத் தட்டி எழுப்புகின்றன, மேலும் உன்னதமான நோக்கங்களை வலுப்படுத்துகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். மக்கள் அனைவரும் ஒரே மந்திரத்தை பக்தியுடன் கூட்டாக உச்சரிக்கும்போது, அது தனி நபருக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசத்திற்கும் உலகத்திற்கும் நன்மை பயக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஸ்ரீ அமித் ஷா கூறுகையில், நமது ஞானிகளான முனிவர்கள், தலைமுறை தலைமுறையாக அயராத தவம் மேற்கொண்டு, மனிதகுலம் அனைத்தின் நலனுக்காக இந்த மந்திரங்களை இயற்றியுள்ளனர். நாம் அவற்றை பக்தியுடன் ஏற்றுக்கொண்டு, நடைமுறையிலும் பின்பற்ற வேண்டும். நவகார் மந்திரம் என்பது காலம், சாதி, பிரதேசம் அல்லது மதம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவித பாகுபாடும் இல்லாத, முற்றிலும் உருவமற்ற, பாரபட்சமற்ற மற்றும் உலகளாவிய ஒரு பிரார்த்தனை என்று அவர் கூறினார். இத்தகைய அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிரார்த்தனை உலகில் மிகவும் அரிதானது.
தமது கர்ம வினைகளை வென்று, சுய உணர்தலுக்கும் விடுதலைக்கும் வழிவகுத்த மகான்களின் நற்பண்புகளுக்குச் செலுத்தப்படும் மரியாதையே இந்தப் பிரார்த்தனை என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறினார். இந்தப் புனித மந்திரத்தில், ‘நமோ’ என்ற சொல் முழுமையான சரணாகதியைக் குறிப்பதோடு, தேடுபவரை அகங்காரத்தைத் துறந்து சுய தூய்மையை நோக்கிச் செல்ல வழிகாட்டுகிறது.
ஒருவர் மரியாதையுடன் தலைவணங்கும்போது, அது அவரது அகங்காரம் கரைவதன் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். அக எதிரிகளை (“அரி”) அழிப்பவரே “அரிஹந்த்” என்று அவர் விளக்கினார். இந்த எதிரிகள் என்பவை உடல், மனம், உணர்ச்சிகள், இயல்பு மற்றும் மனோபாவத்தில் பதிந்துள்ள அசுத்தங்கள் அல்லது தீய குணங்கள் ஆகும், இவை முக்தியை (மோட்சம்) அடைவதைத் தடுக்கின்றன. இந்த அக எதிரிகளை வெல்லும் தேடுபவரே அரிஹந்த் என்று அழைக்கப்படுகிறார்.
பரிபூரண ஞானத்தை அடைந்து, கோபம், கர்வம், வஞ்சகம், பேராசை ஆகியவற்றின் மீது முழுமையான வெற்றி பெற்று, ஜைன சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள 12 தெய்வீக குணங்களையும் பெற்ற ஒருவரே அரிஹந்த் எனக் கருதப்படுகிறார், மேலும் அத்தகைய அரிஹந்த்களை நாம் வணங்குகிறோம் என்று உள்துறை அமைச்சர் கூறினார். இந்த மந்திரம் சித்தர்களுக்கும் மரியாதை செலுத்துகிறது என்றும் அவர் மேலும் கூறினார். முழுமையான விடுதலை நிலையை அடைந்த ஆன்மா சித்தர் என்று அழைக்கப்படுகிறது. எட்டு வகையான கர்மங்களை அழித்து, பிறப்பு-இறப்பு சுழற்சிக்கு அப்பாற்பட்டு, எட்டு தூய குணங்களை அடைந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அத்தகைய எண்ணற்ற சித்தர்களை நாம் வணங்கி அவர்களின் ஆசிகளை நாடுகிறோம் என்று அவர் கூறினார்.
துறவற அமைப்பின் தலைவர்களான ஆச்சார்யர்களுக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது என்று ஸ்ரீ அமித் ஷா கூறினார். ஒழுக்கத்தை நிலைநாட்டுதல், பெரும் விரதங்களைக் கடைப்பிடித்தல் மற்றும் அனைத்து முக்தி தேடுபவர்களுக்கும் வழிகாட்டுதல் ஆகியவை ஒரு ஆச்சார்யரின் முதன்மைப் பொறுப்புகளாகும். முக்தியை அடைவதற்காக யாருடைய நடத்தையைப் பின்பற்ற முடியுமோ, அவரே ஆச்சார்யர் என்று அழைக்கப்படுகிறார். ஜைன சாஸ்திரங்களின்படி, 36 குணங்களைக் கொண்ட ஒருவர் ஆச்சார்யர் நிலையை அடைகிறார். அதேபோல், உபாத்யாயர்கள், அதாவது குரு-புனிதர்களுக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது. சாஸ்திரங்களை ஆழமாகப் படித்து, அந்த அறிவைப் பரவலாகப் பரப்புவது அவர்களின் பொறுப்பாகும். பரிந்துரைக்கப்பட்ட 25 குணங்களை அடைந்த பின்னரே அவர்கள் உபாத்யாயர் பதவிக்குத் தகுதி பெறுகிறார்கள்.
ஒழுக்கம், துறவு, பெரும் விரதங்கள் மற்றும் தவம் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம், தங்களுக்குள் படிப்படியாக 27 நற்பண்புகளை வளர்த்துக் கொள்பவர்களே துறவிகள், சந்நியாசிகள் மற்றும் ஆன்மீகத் தேடல் உடையவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார் ; அத்தகைய குணங்களைக் கொண்ட ஒருவர் சாது என்று அழைக்கப்படுகிறார். இந்த மந்திரம் ஐந்து பரம்பொருள்களுக்கு (பஞ்ச பரமேஷ்டி) மரியாதை செலுத்துவதைக் குறிக்கிறது என்று அவர் கூறினார் . அதன் மையத் தத்துவத்தின்படி, இந்த ஐவரும் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் வகை “தேவன்” , இதில் சாதாரண மனித வாழ்விலிருந்து உயர்ந்து அரிஹந்த் மற்றும் சித்த நிலைகளை அடைந்த மகான்கள் அடங்குவர் . இரண்டாவது வகை “குரு” , இதில் ஆச்சார்யர், உபாத்யாயர் மற்றும் சாது ஆகியோர் அடங்குவர். இந்த ஐந்து வகையான மகான்களுக்கும் தலைவணங்கி, அவர்களின் நற்பண்புகளை உள்வாங்கி, அவர்களின் ஆசிகளைப் பெறுவதே நவகார மந்திரத்தின் சாராம்சம் என்று அவர் கூறினார்.
அரிஹந்த், சித்தர், ஆச்சார்யர், உபாத்யாயர் மற்றும் சாது ஆகியோரிடம் பொதிந்துள்ள 108 நற்பண்புகளுக்கு நாம் அனைவரும் கூட்டாக தலைவணங்குகிறோம் என்று ஸ்ரீ அமித் ஷா கூறினார். இந்த மந்திரம், மிகக் குறுகிய நேரத்தில் அவர்கள் அனைவரின் நற்பண்புகளையும் ஒன்றாக நினைவுகூரவும் போற்றவும் ஒருவருக்கு உதவுகிறது என்றும் அவர் கூறினார். இந்த மந்திரத்தின் ஆழ்ந்த பொருளை உடனடியாக முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் — அதன் ஆழத்தை ஒரு ஆச்சார்யர், துறவி அல்லது கற்றறிந்த ஞானியின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே சரியாகப் புரிந்து கொள்ள முடியும் — இளைஞர்கள் அதை பயிற்சி செய்வதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
24 தீர்த்தங்கரர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றியவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுடன், நவகார மந்திரத்தின் பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார் . தொடக்கத்தில், இந்த மந்திரம் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகப் பரப்பப்பட்டது; பின்னர், கல்வெட்டுகள் மூலம் பாதுகாக்கப்பட்டு, இறுதியில் பல்வேறு சாஸ்திரங்களில் இடம்பிடித்தது. இந்த மந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் சமூகத்தின் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்று அவர் கூறினார். இந்த முயற்சிகள், வருங்கால சந்ததியினரை தெய்வீக மற்றும் நேர்மறையான வாழ்க்கையை நோக்கி வழிநடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். உலகிற்கு அமைதி தேவைப்படும் இக்காலத்தில், நவகார மந்திரத்தை கூட்டாக உச்சரிப்பது சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்தவும், மனக் கலக்கங்களைத் தணிக்கவும் உதவும் என்று அவர் மேலும் கூறினார். இது பரஸ்பர புரிதல், நல்லிணக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் காட்டும் உணர்திறனையும் வலுப்படுத்தும்.
திவாஹர்
