இந்திய ரயில்வே, 2025-26 ஆம் ஆண்டில், பாதுகாப்பை மேம்படுத்துதல், செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் பயணிகளுக்குச் சிறந்த பயண அனுபவத்தை வழங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன், தனது தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள், வலுவான தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் பயணிகளை மையமாகக் கொண்ட புதுமையான தீர்வுகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலம் நவீனமயமாக்கலை முன்னெடுத்துச் செல்வதில் இது ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது.
ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு முதுகெலும்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
இணைய நெறிமுறை பல்நெறிமுறை அடையாள நிலைமாற்ற (IP MPLS) தொழில்நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு முதுகெலும்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தியது இந்த ஆண்டின் ஒரு முக்கிய சாதனையாகும். இந்த உயர் திறன் கொண்ட வலையமைப்பு, மிக முக்கியமான ரயில்வே பயன்பாடுகளின் தற்போதைய மற்றும் எதிர்கால அலைவரிசைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, காணொளிக் கண்காணிப்பை மையப்படுத்தப்பட்ட முறையில் அணுகுவதை சாத்தியமாக்குவதோடு, நகரும் ரயில் வானொலித் தொடர்பு (MTRC), பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS), முன்பதிவற்ற பயணச்சீட்டு அமைப்பு (UTS), சரக்கு போக்குவரத்து தகவல் அமைப்பு (FOIS), மேற்பார்வைக் கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல் (SCADA), காணொளிக் கலந்துரையாடல் மற்றும் பிற செயல்பாட்டுப் பயன்பாடுகள் போன்ற முக்கிய ரயில்வே அமைப்புகளுக்கும் ஆதரவளிக்கும். இதுவரை, 1,396 ரயில் நிலையங்களில் IP MPLS வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. இது, எண்ணிம முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ரயில்வே சூழலமைப்பை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
பயணிகளின் பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ கண்காணிப்பு
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, இந்திய ரயில்வே தனது வீடியோ கண்காணிப்பு அமைப்பை (VSS) 1,874 ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இந்த அமைப்பானது, அத்துமீறல் மற்றும் சுற்றித் திரிதல் போன்ற நிகழ்வுகளைத் தானாகவே கண்டறிவதற்காக மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வீடியோ பகுப்பாய்வுத் தொழில்நுட்பத்தையும், நிகழ்நேர அடையாளம் மற்றும் கண்காணிப்புக்காக முக அங்கீகார மென்பொருளையும் கொண்டுள்ளது. இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய ரயில்வே அமைச்சர், முன்னதாக “கேமராக்கள் இந்த அமைப்பின் கண்களாகவும், செயற்கை நுண்ணறிவு அதன் மூளையாகவும் இருக்கும்” என்று கூறியிருந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பை வலுப்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவின் மாற்றியமைக்கும் பங்கையும் வலியுறுத்தினார்.
நிகழ்நேர அறிவிப்புகளுடன் பயணிகள் தகவல் அமைப்புகளை மேம்படுத்துதல்
ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் அமைப்பின் (IPIS) விரிவாக்கத்துடன், பயணிகள் தகவல் அமைப்புகளும் பெரும் மேம்பாடுகளைக் கண்டுள்ளன. மின்னணு ரயில் குறிகாட்டிப் பலகைகள், பெட்டி வழிகாட்டு அமைப்புகள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்புகளுடன் கூடிய IPIS, ரயில் தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் பரப்புவதை உறுதி செய்கிறது. IPIS-ஐ தேசிய ரயில் விசாரணை அமைப்புடன் (NTES) ஒருங்கிணைப்பது, நிலையங்களில் தானியங்கி, நிகழ்நேர அறிவிப்புகளைச் சாத்தியமாக்குகிறது. இன்றுவரை, இந்திய ரயில்வே முழுவதும் 1,405 நிலையங்களில் இந்த ஒருங்கிணைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.
தடையற்ற இணைப்புக்கான சுரங்கப்பாதை தகவல் தொடர்பு அமைப்புகள்
தகவல் தொடர்புத் திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பு ( USBRL) திட்டம் உட்பட பல்வேறு ரயில்வே மண்டலங்களில் சுரங்கப்பாதை தகவல் தொடர்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன . இந்த அமைப்பு, சுரங்கப்பாதைகளுக்குள் இருக்கும் பணியாளர்களுக்கும் தலைமையகம் மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையங்களுக்கும் இடையே தடையற்ற வானொலித் தொடர்பை உறுதிசெய்கிறது. இதன்மூலம், சவாலான நிலப்பரப்புகளில் பாதுகாப்பும் ஒருங்கிணைப்பும் மேம்படுத்தப்படுகின்றன.
நவீன, பாதுகாப்பான மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ரயில்வே சூழலமைப்பிற்கான அர்ப்பணிப்பு
2025-26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த முன்னெடுப்புகள், பாதுகாப்பான, அறிவார்ந்த மற்றும் திறமையான ஒரு ரயில் வலையமைப்பைக் கட்டமைப்பதற்காக, அதிநவீன தொழில்நுட்பத்தையும் புத்தாக்கத்தையும் பயன்படுத்துவதில் இந்திய ரயில்வேயின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் தொடர்ச்சியான விரிவாக்கம், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்புகளை நிறுவுதல் மற்றும் பயணிகளுக்கான தகவல் சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவை ஒன்றிணைந்து, பயணிகளின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் மற்றும் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகும் ஒரு நவீனமயமான ரயில் சூழலமைப்பை உருவாக்குவதற்குப் பங்களிக்கின்றன.
திவாஹர்
