இந்தியத் துணை குடியரசுத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று ஹரியானா மாநிலம், சோனிபட் மாவட்டம், முர்தாலில் நடைபெற்ற தீன்பந்து சோட்டு ராம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.
ஹரியானாவின் ‘தர்ம க்ஷேத்திரம்’ எனும் புனித பூமியில் இருப்பதில் தனது மகிழ்ச்சியைத் துணை ஜனாதிபதி வெளிப்படுத்தினார். நேர்மை, சமூக நீதி மற்றும் தொலைநோக்குத் தலைமை ஆகியவற்றின் உயர்ந்த சின்னமாகத் திகழ்ந்த தீன்பந்து சோட்டு ராமை அவர் வர்ணித்து, அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார். தீன்பந்து சோட்டு ராம் தனது வாழ்நாளை விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்து, அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதிலும், அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுப்பதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பங்கை ஆற்றியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது பங்களிப்புகளை எடுத்துரைத்த துணை ஜனாதிபதி, கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சமத்துவமான நிலப் பயன்பாட்டு நடைமுறைகள் மீது அவர் அளித்த முக்கியத்துவம், ஒரு வலுவான விவசாயக் கட்டமைப்புக்கு அடித்தளமிட்டதாகக் கூறினார். மேலும், இந்த முயற்சிகள் ஹரியானாவை ஒரு முற்போக்கான மற்றும் செழிப்பான விவசாய மாநிலமாக உருவெடுக்கச் செய்து, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய துணை ஜனாதிபதி, தங்கப் பதக்கம் வென்றவர்களில் கிட்டத்தட்ட 64 சதவீதம் பேர் பெண்கள் என்பதும், பட்டம் பெறும் மொத்த மாணவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, சமீபத்திய ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களின் பிரதிபலிப்பு இது என்றும் விவரித்தார். விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் ‘பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்’ போன்ற முன்னெடுப்புகள் மூலமான தொடர்ச்சியான முயற்சிகள், ஹரியானாவில் பாலின விகிதத்தை கணிசமாக மேம்படுத்தி, சமூக மாற்றம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைக்கு ஊக்கமளிக்கும் ஒரு உதாரணமாகத் திகழ்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான விக்ஸித் பாரத் எனும் தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்ட துணை குடியரசுத் தலைவர், ஆத்ம-நிர்பர் பாரத் என்பதற்கான அழைப்பு என்பது புத்தாக்கம், தன்னம்பிக்கை மற்றும் உள்நாட்டுத் தீர்வுகளுக்கான அழைப்பு என்று வலியுறுத்தினார்.
கோவிட்-19 பெருந்தொற்றின் போது இந்தியாவின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்த துணை குடியரசுத் தலைவர், உலகம் அந்த நெருக்கடியுடன் போராடிக் கொண்டிருந்தபோது, பல நாடுகளும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் தடுப்பூசிகளை உருவாக்கின என்றும், அவற்றில் சில அதிக லாபத்திற்காக அவற்றிற்குக் காப்புரிமை பெற முயன்றன என்றும் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றை தனது மக்களுக்கு இலவசமாக வழங்கியதுடன், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் விநியோகித்தது என்று அவர் குறிப்பிட்டார். இது பாரதத்தின் உணர்வையும் மகத்துவத்தையும் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ரோபோட்டிக்ஸ், குவாண்டம் கணினி மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மாற்றியமைக்கும் தாக்கம் குறித்து துணை ஜனாதிபதி பேசினார். மாணவர்கள் இந்த வளர்ந்து வரும் துறைகளை ஆர்வத்துடனும் பொறுப்புடனும் ஏற்றுக்கொண்டு, தங்கள் அறிவை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் பயன்பாடு எனும் தீமை குறித்துக் கவலை தெரிவித்த துணை ஜனாதிபதி, இளைஞர்கள் போதைப்பொருட்களை உறுதியாக நிராகரித்து, ஆரோக்கியம், குறிக்கோள் மற்றும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். போதைப்பொருள் இல்லாத சமூகத்தின் தூதுவர்களாக அவர்கள் உருவாக வேண்டும் என்றும் அவர் ஊக்குவித்தார்.
மாணவர்களிடையே உரையாற்றிய துணை ஜனாதிபதி, வாழ்க்கையில் வெற்றி என்பது சாதனைகளால் மட்டுமல்ல, நன்னடத்தை, நேர்மை மற்றும் தோல்விகளுக்குப் பிறகு மீண்டு எழும் திறன் ஆகியவற்றாலும் வரையறுக்கப்படுகிறது என்று கூறினார். துன்பங்களையும் அநீதிகளையும் பொறுமையுடன் சகித்துக்கொள்பவர்களே இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்று அவர் கூறினார். மாணவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, வாழ்க்கையின் சவால்களைத் தைரியத்துடனும் நேர்மறை மனப்பான்மையுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அதர்மத்தால் தர்மத்தை வெல்ல முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
மனநிலையைக் காலனித்துவமற்றதாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். உண்மையான கல்வி என்பது சிந்தனையை விடுவித்து, இந்தியாவின் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கையை ஊட்டி, அதன் அறிவுசார் மரபுகளில் பெருமிதத்தை வளர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நன்னடத்தை மற்றும் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய துணை குடியரசுத் தலைவர், மாணவர்கள் தங்களின் கல்விப் பயணத்தின்போது உள்வாங்கிக்கொண்ட விழுமியங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். சிறந்து விளங்க பாடுபடவும், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும், வலிமையான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் தங்களின் பங்கை ஆற்றவும் அவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஹரியானா ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் ஆஷிம் குமார் கோஷ்; ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி; ஹரியானா அமைச்சரவை அமைச்சர் திரு அரவிந்த் குமார் சர்மா; மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் திரு பிரகாஷ் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திவாஹர்
