புது தில்லி, 05 ஏப்ரல் 2026: இந்தியாவின் கடல்சார் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள முக்கிய துறைமுகங்கள், 2025-26 நிதியாண்டில் கூட்டாக 915.17 மில்லியன் டன் (MT) சரக்குகளைக் கையாண்டுள்ளன. இது 904 மில்லியன் டன் என்ற ஆண்டு இலக்கைத் தாண்டியுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 7.06% வளர்ச்சியைக் குறிக்கிறது. மேலும், இத்துறையின் வலுவான மீட்சி, மேம்பட்ட செயல்திறன் மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. துறைமுக உள்கட்டமைப்பை நவீனமயமாக்கவும், தளவாடங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், மற்றும் ‘கடல்சார் அம்ரித் கால் விஷன் 2047’ திட்டத்தின் கீழ் ஒரு முன்னணி கடல்சார் நாடாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மாற்றியமைக்கும் சீர்திருத்தங்கள் மற்றும் மூலோபாய முதலீடுகளின் தாக்கத்தை இந்த மைல்கல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் கூறுகையில், “நமது முக்கியத் துறைமுகங்களால் 915 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகள் கையாளப்பட்ட இந்தச் சாதனை, இந்தியாவின் கடல்சார் துறையை வலுப்படுத்துவதில் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்குச் சான்றாகும். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலுடன், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், நாங்கள் உலகத் தரம் வாய்ந்த துறைமுக உள்கட்டமைப்பை உருவாக்கி, செயல்திறனை மேம்படுத்தி, தடையற்ற தளவாடப் போக்குவரத்தைச் சாத்தியமாக்கி வருகிறோம். இந்தச் சாதனை, ‘கடல்சார் அம்ரித் கால் விஷன் 2047’ திட்டத்தின் கீழ் இந்தியாவை ஒரு உலகளாவிய கடல்சார் வல்லரசாக நிலைநிறுத்துவதற்கான நமது உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது.”
முக்கிய துறைமுகங்கள் முழுவதும் சீரான வளர்ச்சியை இந்தச் செயல்பாடு பிரதிபலிக்கிறது. இதில், தீன்தயாள் துறைமுக ஆணையம் 160.11 மெட்ரிக் டன்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பாரதீப் துறைமுக ஆணையம் 156.45 மெட்ரிக் டன்களுடனும், ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) 102.01 மெட்ரிக் டன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம், மும்பை துறைமுக ஆணையம், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் புதிய மங்களூர் துறைமுக ஆணையம் உள்ளிட்ட பிற முக்கிய துறைமுகங்களும் வலுவான செயல்திறனைப் பதிவுசெய்து, ஒட்டுமொத்த சரக்குக் கையாளுதலுக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளன. வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை, மோர்முகாவ் துறைமுக ஆணையம் 15.91% என்ற அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தா கப்பல்துறை அமைப்பு 14.28% மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் 10.74% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது மேம்பட்ட செயல்திறன் மற்றும் அதிகரித்து வரும் சரக்கு அளவுகளைப் பிரதிபலிக்கிறது.
திறன் விரிவாக்கம் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், வலுப்படுத்தப்பட்ட பல்முனைப் போக்குவரத்து இணைப்பு மற்றும் தடையற்ற உள்நாட்டு இணைப்புகள், டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் துறைமுக முன்னெடுப்புகளை ஏற்றுக்கொள்வது, நிலக்கரி, கச்சா எண்ணெய், கொள்கலன்கள், உரங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் கையாளுதலை அதிகரிப்பது, அத்துடன் மேம்பட்ட சரக்கு கையாளும் நேரம் மற்றும் துறைமுகங்கள் முழுவதும் வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றால் சரக்கு கையாளுதலில் நீடித்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், துறைமுகம் சார்ந்த வளர்ச்சி, தளவாட ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு விரிவான கடல்சார் உத்தியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
2025–26 நிதியாண்டில் பதிவான இந்தச் சாதனை அளவிலான செயல்திறன், வளர்ந்து வரும் வர்த்தக நம்பிக்கையையும், செயல்பாட்டுத் திறன் மற்றும் கொள்ளளவுப் பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கை நடவடிக்கைகளின் செயல்திறனையும் பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியான கொள்கை உத்வேகம் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகளுடன், இந்தியாவின் முக்கியத் துறைமுகங்கள் புதிய மைல்கற்களை மேலும் எட்டுவதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உலகளாவிய வர்த்தகத் தலைமைக்கும் கணிசமாகப் பங்களிப்பதற்கும் சிறந்த நிலையில் உள்ளன.
திவாஹர்
