அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று, யுவ விக்யானி காரியக்ரம் (யுவிகா) போன்ற அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்தை நோக்கிய முன்னெடுப்புகள் மூலம் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை அரசாங்கம் முறையாக வளர்த்து வருவதாகவும், இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற, நலிவடைந்த மற்றும் ஆர்வமுள்ள இளம் உள்ளங்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதாகவும் எடுத்துரைத்தார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, திரு ரியாக கிருஷ்ணையா எழுப்பிய நட்சத்திரக் கேள்விக்கும், திரு நீரஜ் டாங்கி, டாக்டர் பர்மார் ஜஸ்வந்த் சிங் சலாம்சிங் மற்றும் ரஜாதி ஆகியோர் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கும் பதிலளித்த அமைச்சர், யுவிகா திட்டத்தின் வடிவமைப்பு, சென்றடைதல் மற்றும் தாக்கம் குறித்து விரிவாக விளக்கினார்.
2019-ல் தொடங்கப்பட்ட யுவிகா, 9-ஆம் வகுப்பு மாணவர்களைக் குறிவைத்து, அவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ‘இளம் வயதிலேயே அவர்களைக் கவரும்’ ஒரு தனித்துவமான முயற்சி என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஜனநாயக மற்றும் சமத்துவமான பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் இந்தத் திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 10 மாணவர்களும், ஒவ்வொரு யூனியன் பிரதேசத்திலிருந்தும் 8 மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவதால், சமச்சீரான பிராந்தியப் பிரதிநிதித்துவம் பேணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை வலியுறுத்திப் பேசிய அமைச்சர், தேர்வுக்கான தகுதிகளில் ஏற்கனவே கிராமப்புற மாணவர்களுக்கான சிறப்பு முன்னுரிமை சேர்க்கப்பட்டுள்ளது என்றும், இதில் பஞ்சாயத்து அளவிலான பள்ளி மாணவர்களுக்கு 15% முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர், மாணவர்களின் முழுமையான மதிப்பீட்டை உறுதிசெய்யும் வகையில், வினாடி வினா செயல்திறன், அறிவியல் கண்காட்சிகள் மற்றும் ஒலிம்பியாட்களில் பங்கேற்பு, அத்துடன் என்.எஸ்.எஸ், சாரணர் இயக்கம் போன்ற பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு இந்தத் தேர்வு செயல்முறை விரிவானதாக உள்ளது என்றும் கூறினார்.
பங்கேற்பு விவரங்களை வழங்கிய டாக்டர் ஜிதேந்திர சிங், இதுவரை ஐந்து பதிப்புகளில் இந்தத் திட்டத்தின் மூலம் 1,320 மாணவர்கள் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தார். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை நடத்த முடியவில்லை. இருப்பினும், பங்கேற்பு சீராக அதிகரித்து வருகிறது; சமீபத்திய ஆண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 350 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது, இதன் பரவல் மற்றும் தாக்கம் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.
கோடை விடுமுறையின் போது ஒரு மாத கால தங்கும் திட்டமாக யுவிகா நடத்தப்படுகிறது என்றும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இஸ்ரோவின் முதன்மை மையங்களில் செய்முறைப் பயிற்சி பெறுவதுடன், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, அதிநவீன விண்வெளித் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்கிறார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். தற்போது, சதீஷ் தவான் விண்வெளி மையம் (ஸ்ரீஹரிகோட்டா), விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (திருவனந்தபுரம்), மற்றும் விண்வெளிப் பயன்பாட்டு மையம் (அகமதாபாத்) உள்ளிட்ட ஏழு முக்கிய மையங்களில் இந்தத் திட்டம் நடத்தப்படுகிறது. திறனை மேலும் விரிவுபடுத்துவதற்காக, மகேந்திர கிரி (தமிழ்நாடு) மற்றும் ஜோத்பூர் (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் கூடுதலாக இரண்டு மையங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில், மக்களைச் சென்றடைதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான கவலைகளுக்குப் பதிலளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், இத்திட்டம் இயல்பாகவே அனைவரையும் உள்ளடக்கியது என்றும், அரசுப் பள்ளிகள் உட்பட மத்திய மற்றும் மாநில வாரியங்களைச் சேர்ந்த மாணவர்களையும் உள்ளடக்கியது என்றும் மீண்டும் வலியுறுத்தினார். நாடு தழுவிய வினாடி வினாப் போட்டிகள், அறிவியல் கண்காட்சிகள் மற்றும் மாவட்ட, மாநில அளவிலான கல்வி சார்ந்த ஈடுபாடுகள் மூலம் விழிப்புணர்வும் பங்கேற்பும் எளிதாக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அறிவியல் திறமையை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டு வரும் பரந்த சூழலமைப்பை எடுத்துரைத்த அமைச்சர், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளை STEM தொழில் வாழ்க்கையைத் தொடர ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘விக்யான் ஜோதி’ போன்ற துணை முயற்சிகளையும், பெண்களின் தொழில் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பிற ஆய்வு உதவித்தொகைத் திட்டங்களையும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் விண்வெளித் துறையின் விரைவான வளர்ச்சியை டாக்டர் ஜிதேந்திர சிங் அடிக்கோடிட்டுக் காட்டினார். இத்துறை ஒரு சிறிய அடித்தளத்திலிருந்து கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலர் பொருளாதாரமாக விரிவடைந்துள்ளது என்றும், 2033-ஆம் ஆண்டுக்குள் இது 44 பில்லியன் டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியா மேற்கொண்ட 90%க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள் ஏவுதல்கள் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.
யுவிகா போன்ற முன்னெடுப்புகள், எதிர்கால விஞ்ஞானிகளின் வலுவான ஒரு தலைமுறையை உருவாக்குவது மட்டுமின்றி, 2047-ஆம் ஆண்டுக்குள் விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் உலகத் தலைவராக உருவெடுக்கும் இந்தியாவின் நீண்டகால தொலைநோக்குப் பார்வைக்கும் பங்களிக்கின்றன என்று அமைச்சர் கூறி முடித்தார்.
திவாஹர்
