2025-26 நிதியாண்டில் பாதுகாப்பு ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டை விட 62.66% அதிகரித்து, ரூ. 38,424 கோடியாக சாதனை அளவை எட்டியுள்ளது.

2025 -26 நிதியாண்டில் பாதுகாப்பு ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் ரூ.23,622 கோடி என்ற அளவை விட ரூ.14,802 கோடி (62.66%) அதிகரித்து, ரூ.38,424 கோடி என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மைல்கல் சாதனையில், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் (டிபிஎஸ்யுக்கள்) 54.84% மற்றும் தனியார் துறை 45.16% பங்களித்துள்ளன. உலகின் முன்னணி பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இந்தியாவை நிலைநிறுத்த வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்திய பாதுகாப்புத் துறையின் இந்தச் சாதனை அமைந்துள்ளது.

பாதுகாப்பு உற்பத்தித் துறை, இந்திய பாதுகாப்பு ஏற்றுமதியாளர்கள் மற்றும் பிற அனைத்துத் தரப்பினரின் இந்த முன்மாதிரியான செயல்பாட்டைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். மேலும், பாதுகாப்பு உபகரணங்களுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுப்பதை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், பிரதமர் மோடியின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், இந்தியா பாதுகாப்பு ஏற்றுமதியில் ஒரு மகத்தான வெற்றிக் கதையை எழுதி வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பொதுத்துறை நிறுவனங்களின் ஏற்றுமதி 151% அதிகரித்துள்ளது. இதில், தனியார் நிறுவனங்கள் 14% அதிகரிப்பைப் பதிவுசெய்து தங்களின் வலுவான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளன. பங்களிப்பின் மதிப்பின் அடிப்படையில், தனியார் துறை ரூ. 17,353 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதிகளுக்குப் பங்களித்துள்ளது, அதேசமயம் பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 21,071 கோடி பங்களித்துள்ளன. கடந்த நிதியாண்டில் இவற்றின் பங்களிப்பு முறையே ரூ. 15,233 கோடியாகவும், ரூ. 8,389 கோடியாகவும் இருந்தது.

இந்த சாதனை அளவிலான உயர்வான எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது.

இந்தக் கூர்மையான வளர்ச்சி, இந்தியத் தயாரிப்புப் பாதுகாப்புப் பொருட்களுக்கான உலகளாவிய அங்கீகாரம் அதிகரித்து வருவதையும், சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் இத்துறையின் ஒருங்கிணைப்பு வளர்ந்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது. அமைப்புகள்/துணை அமைப்புகளுக்கான ஒரு வெற்றிகரமான உலகளாவிய கூட்டாளியாக இருப்பதுடன், 2025-26 நிதியாண்டு நிலவரப்படி, இந்தியா 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கை முந்தைய நிதியாண்டை விட 13.3% அதிகரித்து, 128-லிருந்து 145-ஆக உயர்ந்துள்ளது.

வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகள், செயல்திறன் சார்ந்த மற்றும் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஒரு பாதுகாப்புத் தொழில்துறைக்கு வழிவகுத்துள்ளன. இந்த வளர்ச்சிப் பாதையில் பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், பாதுகாப்பு உற்பத்தித் துறையானது, மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் அங்கீகாரங்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறை ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பு ஏற்றுமதி ஒழுங்குமுறை செயல்முறைகளை நெறிப்படுத்தியுள்ளது.

Leave a Reply