கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்ந்து இருந்து வந்தன. விஜயின் அரசியல் வருகையைப் பொருத்துக் கொள்ள முடியாமல் ஆளும் திமுக அரசு சதிச் செய்வதாக தவெகவின் சார்பில் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. இதே குற்றச்சாட்டுகள் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு (அதாவது 30. மார்ச் 2026 அன்று) கொளத்தூர் தொகுதியிலும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் அந்த மிகப்பெரிய துயரச் சம்பவம் அரங்கேறியது. இச்சம்பவம் தேசத்தையே பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. அன்று முதல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் பொது வாழ்க்கை மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானது.
இதனால் மக்களை நேரில் சந்திக்க முடியாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். அதற்கு முக்கிய காரணம் பாதுகாப்புக் குறைபாடுகள் தான்.
இன்று (02.04.2026 வியாழக்கிழமை) திருச்சியில் கொடுக்கப்பட்ட பாதுகாப்பைப் போல, அன்று கரூரில் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் அப்படி ஒரு துயர சம்பவமே அங்கு அரங்கேறி இருக்காது.
இன்றைய பாதுகாப்புப் பணிக்காக திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறையினரை நிச்சயம் பாராட்டி தான் ஆக வேண்டும். இந்த நேர்மையும், நடுநிலையும் அனைவர் பாதுகாப்பிலும் பாரபட்சமின்றி தொடர வேண்டும்.
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயின் அரசியல் பொது வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும். அரசியலை விட்டே அவர் நிரந்தரமாக ஓடி விடுவார் என்று ஆயிரக்கணக்கானோர் ஆருடம் சொல்லி வந்தனர். ஆனால் அதன் பிறகு தான் விஜயின் அரசியல் செல்வாக்கு ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. ஆம், ஆளும் கட்சி திட்டமிட்டே விஜயின் அரசியல் நடவடிக்கையை முடக்கப் பார்க்கிறது. அதன் தொடர்ச்சியாக விஜயின் மீது தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகிறது என்ற புரிதல், விஜயைப் பிடிக்காதவர்களுக்கு கூட புரிந்து போனதின் விளைவு. மக்களின் அனுதாபமும், ஆதரவும் விஜய்க்கு நாளுக்கு நாள் வெள்ளம் போல் அதிகரித்து வருகிறது.
தவெக தலைவர் விஜய்க்கு ஏற்பட்டதைப் போல, உலகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்பட்டதில்லை.
விஜய்க்கு கூடும் கூட்டம் உண்மையானது; தன்னெழுச்சியானது என்ற எதார்த்தத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் முதலில் நேர்மையாக ஒத்துக் கொள்ள வேண்டும். ஆம், தவெக கட்சி நிர்வாகிகள் மெனக்கிடல் எதுவும் இல்லாமல், வண்டி வாகனம் வைத்து யாரையும் அழைத்து வராமல் தேனடையில் மொய்க்கும் தேனீக்களைப் போல விஜய்க்கு கூட்டம் கூடுகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிக் கூட்டங்களுக்கு வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி பணம், புடவை மற்றும் பிரியாணி பொட்டலங்களை வைத்துக்கொண்டு வாருங்கள், வாருங்கள் ..என்று ஆட்களை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்! கூலிக் கொடுத்தும் கூட கூட்டத்தில் கடைசி வரை மக்கள் இருப்பதில்லை என்பதை வெட்கத்தோடு இங்கு ஒத்துக் கொள்ள தான் வேண்டும். உண்மை சுடத்தான் செய்யும்; அதற்காக நாம் சொல்லாமல் இருக்க முடியாது.
ஆனால் விஜய்க்கு நிலைமை அப்படி அல்ல; தயவுசெய்து யாரும் கூட்டத்திற்கு வராதீர்கள், வராதீர்கள்.. என்று கும்பிட்டுச் சொல்லியும் கூட;
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்”. என்ற வள்ளுவ பெருந்தகையின் குறலுக்கு வலு சேர்க்கும் வகையில் மக்களின் நடவடிக்கை இருக்கிறது.
ஆம், ஒருவர் மீது கொண்ட அன்பை, கதவை தாழிடுவது போல எவராலும் அடைத்து (மறைத்து) வைக்க முடியாது. அன்பு செய்தவரின் துன்பத்தைக் கண்டு, அன்பு கொண்டவர் சிந்தும் சிறிய கண்ணீரே, உள்ளே இருக்கும் அன்பை வெளிப்படுத்தி ஊருக்கே பறைசாற்றிவிடும். இதுதான் விஜயை தேடி வரும் மக்களின் உண்மையான உணர்வு. இதை யாராவது கொச்சைப்படுத்தினால். மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு சமம்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு மனுஷன் அரசியலுக்கு வந்தது; அரசியல் கட்சியைத் தொடங்கியது ஒரு குத்தமாடா? அவரை முதலில் சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள். முடிவை மக்களிடம் விட்டுவிடுங்கள். அதுதானே நேர்மை; அதுதானே அரசியல் அறம்! இதுப் போன்ற கோபக் குரல்கள் பொதுவெளியில் தற்போது வெளிப்படையாக ஒலிக்க தொடங்கிவிட்டது.
இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிமேதாவிகள் அனைவரும், விஜய் ஒரு கூத்தாடி (நடிகன்) தானே! கூடுகின்ற கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது! அவனால் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாமல்; தேர்தலுக்கு பிறகு அரசியலை விட்டு ஓடி விடுவான் என்று வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் விஜய்க்கு அப்படி ஒரு நிலைமை வரவே வராது!
அப்படிப்பட்ட நபர்களுக்கு நான் ஒன்றை ஆழமாக இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் நினைப்பதைப் போல மற்ற நடிகர்களைப் போல விஜய் சராசரி சாதாரண மனிதன் அல்ல! அவருக்கு ஒன்றும் தெரியாது என்ற விமர்சனமே அவருக்கு பொருந்தாது!! செத்தாலும் மக்களுக்காக சாவாரே தவிர! அரசியலை விட்டு அவர் நிச்சயம் போக மாட்டார். ஏனென்றால், அவருக்கு இழப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை! 50 ஆண்டுகளில் பெறாத அனுபவங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் பெற்றுவிட்டார். ஆம், “மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை” என்ற தத்துவம் தான் அவருக்கு இன்று மிகப் பொருத்தமாக இருக்கும்.
எனவே, இங்கு விஜயை மட்டுமே தொடர்ந்து நோண்டிக் கொண்டு இருக்காமல்; இனியாவது நேர்மையான முறையில் தேர்தலை சந்திப்பதற்கு வழியைப் பாருங்கள்..!
தேர்தலில் பங்கேற்கும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு அரசியல், சமூக அமைப்புகளும் விஜயின் அரசியல் வருகையை நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் விஜயின் அரசியல் வருகை, ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளையும் சேதப்படுத்தி உள்ளது என்பதுதான் எதார்த்தமான உண்மை.
இதை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடகத்துறையை சேர்ந்தவர்களும் வெளிப்படையாக ஒத்துக் கொள்வதற்கு தயங்கினாலும், இந்த தேர்தல் முடிவு அதைதான் நிச்சயம் உணர்த்தும். இது வழக்கமானத் தேர்தல் அல்ல; தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காத அதிசயம் இந்த தேர்தலில் நிச்சயம் நடக்கும். அதுவரை அமைதியாக காத்திருப்போம்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
