அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறுகையில், விண்வெளித் துறைக்கான இந்தியாவின் பிரத்யேக துணிகர மூலதன நிதி சீராக முன்னேறி வருவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவையில் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளித் தொழில்நுட்பச் சூழலமைப்பை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட “அந்தரிக்ஷ் வென்ச்சர் கேப்பிட்டல் ஃபண்ட்”, முக்கிய நிறுவன வழிமுறைகள் தற்போது நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
விண்வெளித் துறைக்கான துணிகர மூலதன நிதியின் நிலை, முதலீடுகள், பயனாளிகள், வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து திரு பஸ்திபதி நாகராஜு கேள்வி எழுப்பினார்.
சிட்பி வென்ச்சர் கேப்பிட்டல் லிமிடெட் (SVCL) முதலீட்டு மேலாளராக இந்த நிதியை நிறுவியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்த நிதி, அக்டோபர் 31, 2025 அன்று செபியிடம் பதிவு பெற்று, ₹1,005 கோடி உறுதியளிக்கப்பட்ட நிதியுடன் நவம்பர் 10, 2025 அன்று தனது ஆரம்பகட்ட நிறைவை எட்டியது.
இதுவரையிலான முன்னேற்றத்தை எடுத்துரைத்த அமைச்சர், காப்பாளரை நியமித்தல், மாற்று முதலீட்டு நிதி (AIF) அலகுகளை வழங்குவதற்காக வைப்பகங்களில் பதிவு செய்தல், மற்றும் பரிசீலனை மற்றும் முதலீட்டுக் குழுக்களை அமைத்தல் உள்ளிட்ட, பதிவுக்குப் பிந்தைய அத்தியாவசிய நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
முன் முதலீட்டுக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, நான்கு முன்மொழிவுகள் ஏற்கனவே மேம்பட்ட நிலையில் உள்ளதாகவும், விண்வெளித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களின் மதிப்பீடு நடைபெற்று வருவதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் தெரிவித்தார். இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் சூழலமைப்பு ஆரம்ப நிலையில் இருப்பதால், பல ஸ்டார்ட்அப்கள் நிறுவன முதலீட்டு செயல்முறைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ள கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
புத்தொழில் நிறுவனங்கள் தங்களின் தரவுகளைச் சீரமைக்கவும், ஆவணங்களை மேம்படுத்தவும், உரிய ஆய்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும் வகையில், அவற்றுக்கு “கைப்பிடியான ஆதரவு” வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார். இந்த எளிதாக்கும் அணுகுமுறையானது, புத்தொழில் நிறுவனங்கள் திறம்பட நிதியுதவியைப் பெறுவதற்கும், தங்களின் புத்தாக்கங்களை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
விரிவான மதிப்பீடு, மூன்றாம் தரப்பு உரிய ஆய்வு மற்றும் ஆவணப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2027 நிதியாண்டின் தொடக்கத்தில் முதல் கட்ட நிதி ஒப்புதல்களும் விநியோகமும் எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த விண்வெளிச் சூழலமைப்பை வளர்ப்பதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த முன்னெடுப்பானது தனியார் துறைப் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கும், புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு முன்னணி சக்தியாக நிலைநிறுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா
