ஒடிசாவின் லக்கன்பூரில் நிலக்கரியிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் தயாரிப்பதற்கான திட்டத்திற்கு, பிசிஜிசிஎல் மற்றும் எம்சிஎல் நிறுவனங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலக் குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்தியாவின் நிலக்கரி வாயுவாக்கல் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முக்கிய படியாக, ஒடிசாவின் லக்கன்பூரில் அமையவிருக்கும் நிலக்கரியிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் திட்டத்திற்காக, பாரத் கோல் கேசிஃபிகேஷன் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் (BCGCL) மற்றும் மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (MCL) ஆகியவற்றுக்கு இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிலக் குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களின் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா இன்று புது தில்லியில் நடைபெற்றது.

ஒரு நாளைக்கு 2000 டன் அம்மோனியம் நைட்ரேட் உற்பத்தி செய்யும் நிலக்கரி ஆலையாகக் கருதப்படும் இந்தத் திட்டம், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வாயுவாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் நிலக்கரி வாயுவாக்கும் திட்டம் என்ற வகையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையைக் குறிக்கிறது. இது எரிசக்தி மற்றும் இரசாயனத் துறைகளில் உள்நாட்டுப் புத்தாக்கம், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கிய ஒரு தீர்க்கமான மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

எம்.சி.எல் நிறுவனத்தின் வசம் உள்ள சுமார் 350 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தத் திட்டம், நிலக்கரி அமைச்சகத்தின் சமீபத்திய முற்போக்கான கொள்கை சீர்திருத்தங்கள் மூலம் சாத்தியமாகியுள்ளது. இந்த சீர்திருத்தங்கள், நிலக்கரி வளம் நிறைந்த பகுதி (CBA) நிலத்தை நிலக்கரி வாயுவாக்கும் திட்டங்களுக்குப் பயன்படுத்த வழிவகுத்து, இந்தியாவின் அபரிமிதமான நிலக்கரி வளங்களை மதிப்புக்கூட்டிப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைத் திறந்து, இத்துறையின் பன்முகத்தன்மையையும் வலுப்படுத்துகின்றன.

நிலக்கரி வாயுவாக்கத்தை ஊக்குவிப்பதில் தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் விதமாக, நிலக்கரி அமைச்சகம் தனது பிரத்யேக நிதி ஊக்கத் திட்டத்தின் கீழ் ₹1,350 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளது. இத்திட்டம் களத்தில் ஏற்கெனவே வலுவான வேகத்தைக் கண்டு வருகிறது. இதன் முக்கிய LSTK (மொத்தத் தொகை முழுமையான திட்டப்பணி) தொகுப்புகளான LSTK-1 மற்றும் LSTK-2 ஆகியவை BHEL நிறுவனத்திற்கும், LSTK-3 மற்றும் LSTK-4 ஆகியவை லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம், சுற்றுச்சுவர் கட்டுமானம் மற்றும் மரங்கள் கணக்கெடுப்பு உள்ளிட்ட தள மேம்பாட்டுப் பணிகள், காலக்கெடுவைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யும் வகையில் இணையாக முன்னேறி வருகின்றன.

நிலக் குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவில் கூடியிருந்தோரிடம் உரையாற்றிய மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, பிரதமரின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, நிலக்கரித் துறையை மாற்றுவதற்கான இலக்கு சார்ந்த முயற்சிகளை அரசு முன்னெடுத்து வருவதாக வலியுறுத்தினார். இந்தியாவில் அபரிமிதமான நிலக்கரி இருப்புக்கள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி, நிலக்கரி வாயுவாக்கத்தை பெரிய அளவில் மேற்கொள்வதன் மூலம், இந்த வளத்தை வழக்கமான பயன்பாட்டிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்..

மாறிவரும் புவிசார் அரசியல் சூழல்கள் மற்றும் விநியோகச் சங்கிலி நிச்சயமற்ற தன்மைகளால் குறிக்கப்பட்ட தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்துவதில் இத்தகைய முயற்சிகள் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தத் திட்டம், புத்தாக்கம், வளத் திறன் மற்றும் நிலையான தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ‘விக்சித் பாரத்’ தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது. இது இறக்குமதிச் சார்பைக் குறைப்பதற்கும், அதன் இயற்கை வளங்களுக்கு மதிப்புக்கூட்டலை மேம்படுத்துவதற்கும், மற்றும் மீள்திறன் கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

Leave a Reply