மொழித் தடைகளைக் கடந்து, சான்றுகள் அடிப்படையிலான ஆயுர்வேதம் குறித்த தகவல்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS), இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் (AICTE) வடிவமைக்கப்பட்ட தளமான அனுவாதினி ஏஐ (Anuvadini AI) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த முயற்சி, இந்தியா முழுவதும் சான்றுகள் அடிப்படையிலான ஆயுர்வேத அறிவை பொதுமக்கள் எளிதில் அணுகுவதை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், அனுவாதினி ஏஐ, CCRAS-இன் ஆராய்ச்சி வெளியீடுகளையும் கல்விப் பொருட்களையும் இந்தி உட்பட 13 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உதவும். இதன் மூலம், சான்றுகள் அடிப்படையிலான ஆயுர்வேத அறிவு நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைவது உறுதி செய்யப்படும்.
வளர்ந்து வரும் மொழித் தொழில்நுட்பமும் பாரம்பரிய இந்திய மருத்துவ அறிவும் ஒருங்கே இணையும் விதமாக, சிசிஆர்ஏஎஸ்-இன் தலைமை இயக்குநர் பேராசிரியர் வைத்திய ரபிநாராயண் ஆச்சார்யா மற்றும் அனுவாதினி ஏஐ-இன் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் புத்த சந்திரசேகர் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அனுவாதினி ஏஐ, தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் ஆளுகை தொடர்பான அறிவை செயற்கை நுண்ணறிவின் மூலம் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. மொழி அல்லது பிராந்தியப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், நம்பகமான, ஆராய்ச்சி அடிப்படையிலான தகவல்கள் குடிமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்தியாவின் 25 மாநிலங்களில் உள்ள 30 நிறுவனங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ள சிசிஆர்ஏஎஸ், ஆயுர்வேத அறிவியலில் அறிவியல் ஆராய்ச்சிகளை நடத்தி வெளியிடுகிறது. அதன் முதன்மை வெளியீடுகளில் ஒன்றான, காலாண்டு ஆராய்ச்சி இதழான சிசிஆர்ஏஎஸ் புல்லட்டின், மற்ற தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) பொருட்களுடன் சேர்ந்து, தற்போது முதன்மையாக ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், அனுவாதினி ஏஐ இந்த ஆராய்ச்சி வெளியீடுகளையும் கல்வி வளங்களையும் 13 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உதவும். இது உண்மையான ஆயுர்வேத அறிவை பரந்த அளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கவும், தவறான தகவல் பரவும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
எம்.பிரபாகரன்
