வடகிழக்குப் பிராந்தியத்தின் உணர்வு, திறமை மற்றும் ஆற்றலைக் கொண்டாடுவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மத்திய வடகிழக்குப் பிராந்தியத் தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை (DoNER) அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் நடைபெற்ற வடகிழக்குப் பிரிவின் வருடாந்திர கலாச்சார விழாவான NEtym 2026-இன் 15-வது பதிப்பில் உரையாற்றினார்.
இந்த அழைப்பிற்காக அமைப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர், இந்தியாவின் ‘அஷ்டலட்சுமி’ என்று மரியாதையுடன் குறிப்பிடப்படும் வடகிழக்குப் பகுதியின் திறன், ஆற்றல் மற்றும் கலாச்சாரச் செழுமையைப் பிரதிபலிக்கும் ஒரு ஆற்றல்மிக்க தளமாக NEtym-ஐப் பாராட்டினார். கடந்த இரண்டு ஆண்டுகளில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சராகத் தனது பதவிக்காலம், இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், தென்கிழக்கு ஆசியா மற்றும் பரந்த உலகளாவிய தளத்திற்கான ஒரு மூலோபாயப் பாலமாக இப்பகுதியின் மகத்தான ஆற்றல் குறித்த தனது புரிதலை ஆழப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தனது 125-வது ஆண்டை நெருங்கும், வளமான பாரம்பரியம் கொண்ட ஒரு நிறுவனத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், வடகிழக்குப் பகுதியின் சிறப்பான மனித மூலதனத்தை எடுத்துரைத்தார். அங்குள்ள சராசரியாக கிட்டத்தட்ட 93% என்ற குறிப்பிடத்தக்க எழுத்தறிவு விகிதத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அப்பகுதியின் இளைஞர்கள் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்குத் தலைமை தாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வடகிழக்குடன் தனக்கிருந்த ஆழமான தனிப்பட்ட தொடர்பை நினைவு கூர்ந்த திரு. சிந்தியா, அப்பகுதியுடனான தனது குடும்ப உறவுகள் குறித்தும், அதன் வளர்ச்சிக்கான தனது தொலைநோக்குப் பார்வைக்குத் தொடர்ந்து உத்வேகமும் ஆற்றலும் அளித்துவரும் எட்டு மாநிலங்களுக்கும் அவர் அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் குறித்தும் பேசினார். மேலும், அப்பகுதியின் கலாச்சார ஆழம் குறித்தும் அவர் எடுத்துரைத்தபோது, அசாம் மற்றும் பிற மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகளை “மந்திரமுக்த்” என்று வர்ணித்தார்; அங்கு ஒவ்வொரு சைகையும் அசைவும் தலைமுறை தலைமுறையாகப் பாரம்பரியத்தையும் அர்த்தத்தையும் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். பூபன் ஹசாரிகா மற்றும் சுபீன் கார்க் போன்ற கலாச்சார ஆளுமைகளுக்கு அஞ்சலி செலுத்திய அவர், வடகிழக்கு இணையற்ற கலை மற்றும் கலாச்சாரச் செல்வங்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இப்பகுதியின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர், எட்டு வடகிழக்கு மாநிலங்களையும் இந்தியாவிற்கும் உலகளாவிய தென்பகுதிக்கும் இடையிலான ஒரு இயற்கையான பாலமாக விவரித்தார். மேலும், அவை உலகளாவிய அளவில் பொருளாதார மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் திறன் கொண்டவை என்றும் குறிப்பிட்டார். அமைச்சகத்தின் முக்கிய முன்னெடுப்புகளை எடுத்துரைத்த திரு. சிந்தியா, இப்பகுதி இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசின் கவனம் சார்ந்த முயற்சிகளை கோடிட்டுக் காட்டினார். மேலும், அவர் NE SPARKS திட்டம், அஷ்டலட்சுமி தர்ஷன் திட்டம் மற்றும் NER போர்ட்டலை மேம்படுத்துதல் குறித்தும் பேசினார்.
NE ஸ்பார்க்ஸ் திட்டம்: இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டம், ஆண்டுதோறும் 800 மாணவர்களுக்கு (ஒவ்வொரு வடகிழக்கு மாநிலத்திலிருந்தும் 100 பேர்) விண்வெளி அறிவியல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற வழிவகை செய்கிறது. இதுவரை எட்டுப் பிரிவுகள் நிறைவடைந்துள்ளன.
அஷ்டலட்சுமி தர்ஷன் திட்டம்: வடகிழக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே கலந்துரையாடலை எளிதாக்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட கலாச்சாரப் பரிமாற்ற முன்னெடுப்பு. 32 தொகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 1,280 மாணவர்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர், மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம் 8,000 மாணவர்களைச் சென்றடையும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
NER போர்ட்டலை மேம்படுத்துதல்: ஏப்ரல் 2026-ல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள, தேசிய தொழில் சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம், வடகிழக்குப் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள், 300-க்கும் மேற்பட்ட தொழில் பாதைகள், 200-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள், 3,000-க்கும் மேற்பட்ட படிப்புகள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட தேசிய நிறுவனங்களுக்கான அணுகலை வழங்கும். திறன்களுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை இந்த போர்ட்டல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வடகிழக்கு பிராந்தியத்திற்கான அணுகுமுறையானது வெறும் நோக்கத்திலிருந்து செயலாக்கத்திற்கு மாறியுள்ளது என்றும், இதன் மூலம் வாய்ப்புகள் என்பது அணுகல் மற்றும் அனைவரையும் உள்ளடக்குவதன் மூலம் வரையறுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். தனது உரையை நிறைவு செய்த திரு. சிந்தியா, வடகிழக்கின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கைப் பாராட்டினார். மேலும், இப்பிராந்தியம் தற்போது எப்படி இருக்கிறது என்பதிலிருந்து, அது எப்படி உருவாகி வருகிறது மற்றும் அதன் இளைஞர்கள் அதை எப்படி மாற்றுவதற்கு வழிவகுக்கிறார்கள் என்பதை நோக்கி உரையாடல் நகர வேண்டும் என்றும் அவர் கூறினார். NEtym-ஐ ஒரு கலாச்சார விழாவாக மட்டுமல்லாமல், அது அடையாளம், இலட்சியம் மற்றும் விக்ஸித் பாரதத்தை நோக்கிய இந்தியாவின் கூட்டுப் பயணத்தின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடு என்றும் அவர் விவரித்தார்.
வடகிழக்குப் பகுதியின் கலாச்சாரச் செழுமையையும் அபிலாஷைகளையும் கொண்டாடும் வகையில், இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திவாஹர்
