இணைப்பை மேம்படுத்துதல், நெரிசலைக் குறைத்தல் மற்றும் செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, மேற்கு மற்றும் கிழக்கு ரயில்வேயில் இரண்டு முக்கிய ரயில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத்தில் உள்ள கோசாம்பா–உம்ராபடா அகல ரயில் பாதை மாற்றப் பிரிவுடன் இணைப்பதற்காக கோசாம்பாவில் ரயில் மேல் ரயில் (RoR) மேம்பாலம் கட்டுதல் மற்றும் பீகாரில் உள்ள பகல்பூரில் புதிய ரயில் புறவழிச்சாலையை மேம்படுத்துதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட மொத்த செலவு ₹647.58 கோடி ஆகும்.
மேற்கு ரயில்வேயின் கோசாம்பா – உம்ரபாடா ஜிசி பிரிவில் (9.20 கி.மீ) ரயில் மேல் ரயில் மேம்பாலம் அமைக்க அனுமதி
கோசாம்பா – உம்ரபாடா அகலமாற்றுப் பகுதிக்கு (9.20 கி.மீ.) தடையற்ற இணைப்பை வழங்கும் வகையில், ₹344.38 கோடி மொத்த மதிப்பிடப்பட்ட நிறைவுச் செலவில் இரயில்வே-மேல்-இரயில் (RoR) மேம்பாலம் கட்டுவதற்கு இந்திய இரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. கோசாம்பா–உம்ரபாடா பகுதியானது மும்பை–வதோதரா பிரதான இரயில் பாதையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, மேலும் அதன் அகலமாற்றுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைந்துள்ளதால், அகலமாற்றப் பாதையை பிரதானப் பாதையுடன் தரைவழி இணைப்பு மூலம் நேரடியாக இணைப்பது சாத்தியமில்லை. அங்கீகரிக்கப்பட்ட ‘ரயில் மேல் ரயில்’ மேம்பாலம், தரைவழி இணைப்புகளை நீக்கி, அகலமாற்றப் பகுதியை மும்பை-வதோதரா பிரதானப் பாதையுடன் தடையின்றி ஒருங்கிணைக்க உதவும். இது, இந்த முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் தடையற்ற மற்றும் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதோடு, அகலமாற்றத் திட்டத்தின் முழுப் பலன்களையும் அடையவும் உதவும்.
கிழக்கு ரயில்வேயின் பாகல்பூர் புறவழிச்சாலைக்கு (13.38 கி.மீ.) அனுமதி
கிழக்கு ரயில்வேயில் ₹303.20 கோடி மதிப்பீட்டில் பாகல்பூர் புறவழிச்சாலை (13.38 கி.மீ.) அமைப்பதற்கும் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புறவழிச்சாலையானது, பராஹத்-பாகல்பூர் பிரிவில் உள்ள கோனுதாம் நிறுத்தத்தையும், பாகல்பூர்-சாஹிப்கஞ்ச் பிரிவில் உள்ள சபூரையும் இணைக்கும். இதன்மூலம் பாகல்பூர் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்.
தற்போது, பராஹத்–பாகல்பூர் வழித்தடம் 125 சதவீதத்திற்கும் அதிகமான கொள்ளளவு பயன்பாட்டில் இயங்குவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பராஹத்–பாகல்பூர் மற்றும் பாகல்பூர்–சாஹிப்கஞ்ச் வழித்தடங்களுக்கு இடையே செல்லும் ரயில்களுக்கு பாகல்பூரில் இன்ஜினைத் திருப்ப வேண்டியிருப்பதால், தாமதமும் செயல்பாட்டுத் திறமையின்மையும் ஏற்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட இந்த மாற்றுப்பாதை, செயல்பாட்டுச் சீர்மையையும் நேரந்தவறாமையையும் கணிசமாக மேம்படுத்தும்.
இந்த உள்கட்டமைப்புப் பணிகள் குஜராத் மற்றும் பீகாரில் ரயில் இணைப்பை வலுப்படுத்தி, பாதுகாப்பை மேம்படுத்தி, நெரிசலைக் குறைத்து, ரயில் இயக்கங்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கும். நாட்டின் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ரயில்வே அமைச்சகம் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், ரயில் வலையமைப்பில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.
திவாஹர்
