பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்கள், மார்ச் 24, 2026 அன்று புது தில்லியில் முப்படைகளின் தலைமைத் தளபதி, முப்படைத் தளபதிகள், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு உற்பத்திச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) தலைவர் ஆகியோருடன் நடத்திய சந்திப்பின்போது, மேற்கு ஆசியாவின் நிலைமை மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையில் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்தார். உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்புச் சூழல், தற்போது நடைபெற்று வரும் மோதல்கள் தீவிரமடைவதால் இந்தியாவில் ஏற்படக்கூடிய தாக்கம், அத்துடன் தற்போதைய புவிசார் அரசியல் சூழலால் உருவாகும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் அவருக்கு விளக்கப்பட்டது. பாதுகாப்பு உபகரணங்களின் கொள்முதல் மற்றும் உற்பத்தி தொடர்பான விநியோகச் சங்கிலி மேலாண்மையில் இந்தச் சூழலின் தாக்கம், அத்துடன் தற்போதுள்ள உபகரணங்களின் பராமரிப்பு மற்றும் சேவைத்திறன் குறித்தும் ஆராயப்பட்டது.
இந்தியாவின் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக, நடைபெற்று வரும் மோதலில் இருந்து பெறப்பட்ட செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்பப் படிப்பினைகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டார். “கற்றுக்கொண்ட பாடங்கள், எதிர்கால சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த பத்தாண்டுகளுக்கான ஒரு விரிவான ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை நாம் முறைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், அனைத்து முனைகளிலும் தற்சார்பையும் செயல்பாட்டுத் தயார்நிலையையும் உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
திவாஹர்
