குறைப்பிரசவங்களுக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளை உருவாக்க, 12,000 பெண்களை உள்ளடக்கிய இந்தியாவின் மிகப்பெரிய கர்ப்பகாலக் குழு ஆய்வு!-டாக்டர் ஜிதேந்திர சிங்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறுகையில், ‘கர்ப்-ஐஎன்ஐ’ (GARBH-INi) முன்முயற்சியின் கீழ் 12,000 பெண்களை உள்ளடக்கிய இந்தியாவின் மிகப்பெரிய கர்ப்பிணிக் குழு ஆய்வு, பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கும், வயது வந்தோரின் நோயுற்ற தன்மைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றான குறைப்பிரசவங்களைக் கையாள்வதற்கு, உள்நாட்டு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

புது தில்லியில் உள்ள இந்தியா ஹேபிடேட் சென்டரில், உயிரி தொழில்நுட்பத் துறையின் (DBT) ஒரு முன்னெடுப்பான, “கர்ப்-ஐஎன்ஐ (பிறப்பு விளைவுகள் குறித்த மேம்பட்ட ஆராய்ச்சிக்கான பல்துறை குழு)-யின் கற்றல்களையும் விளைவுகளையும் பரப்புதல்” என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் எஸ். கோகலே; நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால்; டி.எச்.எஸ்.டி.ஐ-யின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கணேசன் கார்த்திகேயன் ஆகியோருடன் முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் கலந்துகொண்டனர்.

GARBH-INi முன்னெடுப்பு குறித்துப் பேசிய அமைச்சர், குறைப்பிரசவங்களால் ஏற்படும் உலகளாவிய பாதிப்பில் இந்தியாவும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்றும், எனவே இந்தியச் சூழல்களுக்கு ஏற்ற தீர்வுகளை உருவாக்குவது அவசியம் என்றும் கூறினார். தனிப்பயனாக்கப்பட்ட கணிப்புகளுக்காக, மருத்துவ நோய்ப்பரவலியல், மல்டி-ஓமிக்ஸ் உயிர் குறிப்பான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான, தரவு சார்ந்த அணுகுமுறையை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply