தில்லியில் சுமார் ரூ. 33,500 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் சுமார் ₹33,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று (08.03.2026) தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இன்று, தில்லியின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்க நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம் என்று கூறினார்.

இந்த திட்டங்களின் நோக்கம் விரிவானது எனவும், மெட்ரோ கட்டமைப்பின் வளர்ச்சியிலிருந்து ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கான நவீன குடியிருப்பு வளாகங்களை நிறுவுதல் வரை பல திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தில்லி மக்கள், புதிய நம்பிக்கையுடனும், புதிய உறுதியுடனும், ஒரு வருடத்திற்கு முன்பு இரட்டை இன்ஜின் அரசை அமைக்க வகை செய்ததாக அவர் குறிப்பிட்டார். அதன் விளைவு இன்று இந்த வளர்ச்சிப் பணிகளில் தெரிவதாக திரு நரேந்திர மோடி கூறினார்.

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் சூழலில், பெண்கள் பெருமளவில் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதைப் பாராட்டிய பிரதமர், அரசின் வெற்றிகரமான முயற்சிகளால் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சியை பெண்கள் இயக்குவதாக எடுத்துரைத்தார். அரசியல், நிர்வாகம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை என எதுவாக இருந்தாலும், இந்தியாவின் மகளிர் சக்தி ஒவ்வொரு துறையிலும் புதிய ஆற்றலுடன் முன்னேறி வருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

இந்திய ஜனநாயகத்தின் உலகளாவிய அடையாளம், ஆற்றல் ஆகியவற்றின் சின்னமாக தில்லி உள்ளது என்பதை எடுத்துரைத்த பிரதமர், நமோ பாரத் ரயில், மெட்ரோ கட்டமைப்பின் விரிவாக்கம் போன்ற தலைநகரின் உள்கட்டமைப்புகள், இந்தியாவின் நம்பிக்கையை உலகிற்கு வெளிப்படுத்தும் என்று குறிப்பிட்டார். தில்லி எந்த அளவு நவீனமாக சிறப்பாக இணைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு இந்தியாவின் தன்னம்பிக்கை உலகிற்குத் தெரியும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இரட்டை இன்ஜின் நிர்வாக மாதிரியின் கீழ், தேசிய தலைநகரில் உள்ள பேருந்து சேவைகள் முறையாக மேம்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். மத்திய அரசால் வழங்கப்பட்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் கூடுதலாக 1,800 புதிய பேருந்துகள் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply