மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் இன்று (மார்ச் 7, 2026) நடைபெற்ற 9-வது சர்வதேச சந்தால் சமூக மாநாட்டில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது முன்னோரான தில்கா மாஜி, கிட்டத்தட்ட 240 ஆண்டுகளுக்கு முன்பு சுரண்டலுக்கு எதிரான கிளர்ச்சிக் கொடியை உயர்த்தியது சந்தால் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்றார்.
சந்தாலி சமூகத்தின் வரலாற்றில் 2003-ம் ஆண்டு என்றென்றும் நினைவுகூரப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அந்த ஆண்டு, சந்தாலி மொழி இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில், சாந்தாலி மொழி எழுத்துகளில் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பு வெளியிடப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பழங்குடி சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் நாட்டுப்புற இசை, நடனங்கள், மரபுகளைப் பாதுகாத்து வருவதாகக் குடியரசுத் தலைவர் கூறினார். அவர்கள் இயற்கையின் மீதான அன்பைப் பராமரித்து வருகின்றனர் எனவும், இது தலைமுறையிலிருந்து தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இயற்கைப் பாதுகாப்பு பாடத்தை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சந்தால் சமூகம் உட்பட பழங்குடி சமூகத்தினர், வளர்ச்சிக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வி, சுகாதாரம், பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது காலத்தின் தேவை என்று குடியரசுத் தலைவர் கூறினார். பழங்குடி இளைஞர்கள் கல்வி, திறன் மேம்பாடு ஆகியவை மூலம் முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் இந்த அனைத்து முயற்சிகளிலும், அவர்கள் தங்கள் வேர்களை மறந்துவிடக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார். நமது மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கவும், கல்விக்கு முன்னுரிமை அளிக்கவும், சமூகத்தில் சகோதரத்துவத்தைப் பராமரிக்கவும் நாம் உறுதிபூண்டிருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திருமதி் திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.
திவாஹர்
