ஒடிசா மாநிலம் முண்டாலியில் இன்று நடைபெற்ற மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) 57-வது அமைப்புதின விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். மத்தியத் தொழிலக பாதுகாப்புப் படையினருக்கு ரூ. 890 கோடி செலவில் கட்டப்பட உள்ள 3 (காம்ரூப், நாசிக், செஹோர்) குடியிருப்பு வளாகங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியதோடு, 2 (ரஜார்ஹட், தில்லி) குடியிருப்பு வளாகங்களை திறந்து வைத்தார். இந்த விழாவில், மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, மத்திய உள்துறைச் செயலாளர், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா, துணிவு, தியாகம், அர்ப்பணிப்பு என்ற இந்திய வரலாற்றில் வளமான பாரம்பரியங்களை ஒருங்கிணைத்துள்ள சிஐஎஸ்எஃப் நவீன ஆயுதங்களையும் கொண்டு அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொண்டு தீர்வுகண்டுள்ளது என்றார். நாட்டின் பாதுகாப்பு கேடயமாக சிஐஎஸ்எஃப் எப்போதும் உறுதியுடன் நிற்கிறது என்று அவர் பாராட்டுத் தெரிவித்தார். அனைத்துத் துறைமுகங்களின் பாதுகாப்பையும் சிஐஎஸ்எஃப்-இடம் ஒப்படைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
நாட்டு மக்களிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி இரண்டு முக்கியமான தீர்மானங்களை முன்வைத்துள்ளார். ஒன்று, 2047-க்குள் இந்தியாவை முழுவதும் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது மற்றொன்று அனைத்துத் துறைகளிலும் உலக அளவில், முதலிடத்தில் வைப்பதோடு, 2027-க்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவது. இந்த இலக்குகளை அடைவதற்கு கிரியா ஊக்கியாக சிஐஎஸ்எஃப் முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு அமித் ஷா கூறினார்.
எம். பிரபாகரன்
