திருச்சி – சென்னை பைபாஸ் காவிரி பாலத்தில் இருந்து பனையக்குறிச்சி, சர்கார்பாளையம் வழியாக கல்லணை வரை செல்லும் சாலை, குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது.
இதனால் கல்லணைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும்; பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களும், அப்பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்தச் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தரமற்ற சேதமடைந்த இந்த சாலையால் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலை பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. வெளி மாவட்ட, வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் கல்லணைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் சேதமடைந்த இந்த சாலையைக் கண்டு முகம் சுளிக்கின்றனர்.
மேலும், இதே வழித்தடத்தில் பூசைப்படித்துறையில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் தஞ்சாவூர் மாவட்ட எல்லை தொடங்கி விடுவதால்; தோகூர் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. தற்போது சாலையின் ஓரத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலையில் ஜல்லிக் கற்களை கொட்டி சாலையை ஆக்கிரமித்துள்ளனர்.
சாலையை மேற்பார்வையிட்டு பராமரிக்க வேண்டிய சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள்; இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறார்கள்.
இதற்குப் பிறகாவது இந்த வழித்தடத்தை திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரில் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
