குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டிருப்பது காலனித்துவ செல்வாக்கை கைவிடுவதில் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாகும்: குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ராஜாஜி விழாவில், எட்வின் லூடியன்ஸ் சிலைக்கு மாற்றாக ராஜாஜியின் மார்பளவு சிலையைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் பங்கேற்று பேசிய குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், ராஜாஜியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டிருப்பது காலனித்துவ செல்வாக்கை கைவிடுவதில் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாகும் என்றார். காலனித்துவ மனநிலையிலிருந்து வெளியேறுவது என்ற இந்தியாவின் இயக்கம் ஒரு நிகழ்வாக மட்டும் இருக்காது என்றும், ஆளுகை, சட்டம், கல்வி, கலாச்சாரம், தேசிய அடையாளம் என அனைத்திலும் நடைபெறும் மாற்றமாகும் என்று அவர் கூறினார்.

இந்த சீர்திருத்தங்களின் மையம் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையிலான சீர்திருத்தங்களாகும் என்று குறிப்பிட்ட அவர், காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபட வேண்டும் என்று பிரதமர் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார் என்றும், இது பிரிட்டிஷ் ஆட்சிக்கால நிறுவனங்கள் மற்றும் அணுகுமுறைகளை மாற்றியமைக்கிறது என்றும் கூறினார்.

ராஜ்பவன் என்பதை மக்கள் மாளிகை என மாற்றியது, பிரதமர் அலுவலகம் சேவை தீர்த்தமாக பரிணமித்தது, மத்திய செயலகம் கடமை மாளிகையாக மறுபெயர் சூட்டப்பட்டது, காலனித்துவ காலத்தின் குற்றவியல் சட்டங்களை மாற்றியது போன்றவை வெறும் அடையாளப்பூர்வமானவை அல்ல, அவை அரசின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என்று திரு ராதாகிருஷ்ணன் கூறினார்.

ராஜாஜி விழா என்பது இந்தியாவின் மகத்தான மனிதருக்கு அளிக்கப்படும் சரியான அங்கீகாரம் என்று வர்ணித்த அவர், சி ராஜகோபாலாச்சாரி, நாட்டின் வரலாற்றில் சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளார் என்றார். வழக்கறிஞராக, சுதந்திரப் போராட்ட வீரராக, ராஜதந்திரியாக, அரசியல்வாதியாக, எழுத்தாளராக, ராஜாஜியின் பன்முகத் திறமை மிகவும் விரிவானது என்பதை குடியரசு துணைத்தலைவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் பொருளாதார கொள்கை, சுதந்திரமானதாகவும், தாராளமானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதாக திரு ராதாகிருஷ்ணன் கூறினார். ராஜாஜியின் வாழ்க்கை குடிமக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி குடியரசு துணைத்தலைவர் தமது உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply