இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா மகிழுந்து ஆலை நாளை பிப்ரவரி 9&ஆம் தேதி திறக்கப்படுவதாகவும், இது தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் பெரும் சாதனை என்றும் திமுக அரசு பெருமை பேசி வருகிறது. இந்த ஆலை கொண்டு வரப்பட்டதன் நோக்கங்களில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல், யாருக்கும் எந்த நன்மையையும் ஏற்படுத்தாமல், டாடா மகிழுந்து ஆலையை திறப்பது என்பது தமிழ்நாட்டுக்கு பெருமையல்ல… மாறாக தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
தமிழ்நாடு அரசுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2024&ஆம் ஆண்டு மார்ச் மாதம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி பனப்பாக்கம் சிப்காட் வளாளத்தில் 470 ஏக்கர் பரப்பளவில் ரூ.9,000 கோடி முதலீட்டில் டாடா மகிழுந்து ஆலை அமைப்பதற்கான அடிக்கல் கடந்த 28.09.2024&ஆம் நாள் நாட்டப்பட்டது. அதன்பின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டதாகக் கூறி நாளை திறப்பு விழா நடத்தப்படும் என்றும், அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் திமுக அரசு அறிவித்துள்ளது.
உண்மையில், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக அரசு நடத்தும் ஏராளமான நாடகங்களில் இதுவும் ஒன்று ஆகும். பெரு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக சில அடிப்படையான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அதன்படி பனப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா மகிழுந்து ஆலையின் தன்மை எத்தகையது? அதனால் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? அதை டாடா நிறுவனம் எவ்வாறு கையாளும்? உற்பத்தி செய்யப்படும் மகிழுந்துகளை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் என்னென்ன? அதனால் எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்? அதை சமாளிக்க செய்யப்பட்டுள்ள கட்டமைப்புகள் என்னென்ன? ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கையாளுவதற்கான திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் என்னென்ன? இவை அனைத்துக்கும் மேலாக டாடா மகிழுந்து ஆலை மூலம் வழங்கப்படும் மொத்த வேலைவாய்ப்புகள் எவ்வளவு? அவற்றில் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புகளின் விழுக்காடு எவ்வளவு? என்பது குறித்த விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டு, அது சொல்லிலும், செயலிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஆனால், டாடா மகிழுந்து ஆலை இவை எதையும் செய்யவில்லை. அதுமட்டுமின்றி, ஆலையை கட்டமைக்கும் பணிகள் கூட இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனினும், இன்னும் இரு வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், திமுக ஆட்சியிலேயே டாடா ஆலை திறக்கப்பட்டதாக வரலாற்றில் பதிவாக வேண்டும் என்பதற்காக இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படாத டாடா ஆலையை அவசர, அவசரமாக திறக்கும்படி திமுக அரசு அழுத்தம் கொடுத்து வென்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஒரு பகுதியில் பெரு நிறுவனங்களின் ஆலைகள் அமைக்கப்படும் போது, அதன் வேலைவாய்ப்புகளில் பெரும்பாலானவை தகுதி படைத்த உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும். 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆனாலும் கூட நடைமுறையில் உள்ளவாறு உள்ளூர் இளைஞர்களுக்கு டாடா மகிழுந்து ஆலையில் வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு வேலையும் வழங்கப்படவில்லை.
பனப்பாக்கம் டாடா மகிழுந்து ஆலையில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று திமுக அரசும், டாடா நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட போது கூறப்பட்டது. டாடா மகிழுந்து ஆலை அந்தரத்தில் அமைக்கப்படவில்லை. மாறாக, அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அமைக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 470 ஏக்கர் நிலத்தில் தான் மகிழுந்து ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களின் நிலங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளன. அவற்றை ஈடு செய்யும் வகையில் நிலம் வழங்கிய குடும்பங்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுவது கட்டாயமாகும்.
டாடா மகிழுந்து ஆலை மூலம் 5000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறைந்தது 3500 வேலைவாய்ப்புகளாவது உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது மட்டுமின்றி, எந்த அடிப்படையில் டாடா மகிழுந்து ஆலைக்கு ஆள்தேர்வு நடைபெறவுள்ளது என்ற கொள்கையைக் கூட அரசும், டாடா மோட்டார்சும் அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு, பெரு நிறுவனங்களின் கையாளாக மாறி தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை மன்னிக்க முடியாது.
வேலைவாய்ப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் உள்ளூர் மக்களின் நலன்களுக்கு எதிராக திமுக அரசும், டாடா மோட்டார்சும் செயல்படுவதால் பனப்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 100&க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கொந்தளித்துள்ளனர். இது தொடர்பாக சிப்காட் மேலாண்மை இயக்குனர், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மனுக்களை அனுப்பியும் எந்த பயனும் இல்லை. நிலம் கொடுத்த மற்றும் உள்ளூர் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.
எனவே, பனப்பாக்கம் டாடா மகிழுந்து ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்துக் கட்டமைப்பு, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பான கொள்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். டாடா மகிழுந்து ஆலையின் வேலைவாய்ப்புகளில் பெரும்பான்மை பங்கு நிலம் கொடுத்த குடும்பங்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த சமூகநீதிக் கடமையை செய்ய திமுக அரசு தவறினால் பனப்பாக்கம் பகுதியில் பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்
