தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு ஏற்படுத்த தவறிய அரசாக செயல்படுவது நியாயமில்லை. விவசாயத் தொழில் சார்ந்த பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது தமிழக அரசின் கடமை.

குறிப்பாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் கடின உழைப்பால் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் வேளையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து நல்ல தீர்வு கண்டிருக்க வேண்டும். கடந்த தேர்தல் நேரத்தில் தி.மு.க அளித்த விவசாயம், விவசாயிகள் சார்ந்த வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற வேளையில் விவசாயிகள் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் கறம்பக்குடி தாலுகா, துவார் கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மேற்படி சோலார் மூலம் மின் உற்பத்தி செய்து மழையூர் பவர் ஹவுசிற்கு மின்சாரம் கொண்டு செல்ல தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் மின் கம்பங்களை நடுவது அந்த தனியாருக்கு தெரியாது என்கின்றனர்.

இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாமல், வருவாய் ஈட்டமுடியாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் வருங்காலங்களில் தென்னை விவசாயம் செய்யும் போதோ, வாழை விவசாயம் செய்யும் போதோ, சவுக்கு கன்றுகள் நடும் போதோ விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைவார்கள். எனவே மின் கம்பங்களை விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா இடங்களில் நடாமல் சாலை ஓரம் நட வேண்டும்.

எனவே தமிழக அரசு சோலார் மின் உற்பத்தி செய்வது தேவையானது என்றாலும் விவசாயம் பாதிக்காத வகையில் தனியாருக்கு இடத்தை ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓடும் அக்கினியாற்றில் புதர் மண்டிக்கிடக்கும் கருவேலஞ்செடிகள் மற்றும் வனத்தோட்டக் கழகத்தால் நடப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் மரங்கலை அகற்றி, தூர்வாரி, தடுப்பணை கட்டித்தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்த நெற்பயிர்கள் அறுவடை செய்யப்படுகின்ற வேளையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விரைந்து கொள்முதல் செய்து மழை மற்றும் பனியின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் காவேரி உலவயல் கிளை வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரி தர கடந்த ஓராண்டாக மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் இன்னும் பணிகள் நடைபெறாததால் தமிழக அரசு இப்பிரச்சனையை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வறட்சியான மாவட்டங்களில் உள்ள ஆறுகளை தூர்வாரி நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டித்தர வேண்டும். இடுபொருட்களின் விலை உயர்வு, இயந்திரங்களுக்கான வாடகை அதிகரிப்பு என பல்வேறு வகையில் பொருளாதார உயர்வு இருப்பதால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆக உயர்த்தி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply