தமிழகம் முழுவதும் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம் என்ற தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு. 4 ½ ஆண்டுகளை கடந்து இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது தமிழக அரசின் ஏமாற்றுவேளை.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் 6 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.ஐ (DPI) பள்ளிக்கல்வி வளாகத்தில் ஜனவரி 8ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியான வாக்குறுதி எண் 181-ஐ நிறைவேற்ற வேண்டும் எனவும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தற்போதைய தொகுப்பூதியமான 12,500-லிருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு போராட்டம் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பலுர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர உடற்கல்வி அசிரியர் கண்ணன் அவர்கள் மண்டபத்தில் இருந்த போது இன்னும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையே என மன உளைச்சல் அடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது.
இடைநிலை ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசிரியர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ளாமல், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தமிழக அரசின் அடக்குமுறையை எடுத்துக்காட்டுகிறது.
எனவே தமிழக அரசு வாக்குறுதியையும், பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளையும், போராட்டத்தையும் கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
