மத்திய மாநில அரசுகள் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி. கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழகத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இன்று அதிகாலை நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இச்சூழலில் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வரும் அத்து மீறல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் நீடிக்கிறது.

மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், பறிமுதல் செய்த படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக மீனவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தியும் இன்னும் அவர்களுக்கு நல்ல தீர்வு எட்டப்படவிலை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் தமிழக மீனவர்களுக்கு வருவாய் ஈட்ட முடியாத நிலையில் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

மத்திய அரசு இலங்கை அரசுடன் உடனடியாக பேசி கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களையும், பறிமுதல் செய்துள்ள விசைப்படகையும் மீட்க வேண்டும்.

மேலும் தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கையை இலங்கை கடற்படையினர் இனிமேலும் மேற்கொள்ளக்கூடாது என்பதையும் மத்திய அரசு இலங்கைக்கு கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு உதவிக்கரமாக, பாதுகாப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply