திண்டுக்கல்லில் ரூ.1,594.90 கோடி செலவிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.1.2026) திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 337 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 174 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,62,864 பயனாளிகளுக்கு 1082 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்; நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திண்டுக்கல் மாநகராட்சியில் 132 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மறுசீரமைப்புப் பணிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் 8 கோடியே ஒரு இலட்சம் ரூபாய் செலவில் சத்யா நகர் பகுதியில் சமுதாயக் கூடம், தென்றல் நகர், கைராசி நகர் ஆகிய இடங்களில் பூங்காக்கள், ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம், கொடைக்கானல், கே.ஆர்.ஆர். கலையரங்க வளாகத்தில் 2 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் அறிவியல் பூங்கா;

திண்டுக்கல் – நேருஜி மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் இரண்டு தொகுதிக் கட்டடங்கள் மற்றும் கவடக்காரத் தெரு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம், பழனி – கடைவீதி நடுநிலைப் பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் 1 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் இராஜாஜி சாலை, சத்யா நகர் பகுதியில் மேம்படுத்தப்பட்ட இராசகோபால் பூங்கா; சின்னாளபட்டி, பாளையம், சித்தையன்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய பேரூராட்சிகளில் 23 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, தினசரி சந்தை; கூட்டுறவுத் துறை சார்பில், ஆத்தூரில் 75 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டிடம்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி மையக் கட்டிடங்கள், நியாயவிலைக் கடைகள், பாலங்கள், உணவு தானியக் கிடங்குகள், பயணியர் நிழற்குடைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்திற்கான 3 தொகுதிக் கட்டிடத்திற்கு மேற்கூரைகள், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு மைதானம், கால்பந்து மைதானம், ஓட்டப்பந்தயம், பொதுக் கழிப்பறைகள் மற்றும் கால்பந்து மைதானத்திற்கான படுக்கை வசதிகள், சமத்துவபுர வீடுகள், குளியலறைகள், நுழைவுவாயில், உணவு அருந்தும் கூடம், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், சமுதாய சுகாதார வளாகங்கள், சமையலறைக் கட்டிடங்கள் போன்ற பல்வேறு முடிவுற்றப் பணிகள் என 41 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் 70 மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டப் பணிகள்;

பள்ளிக் கல்வித் துறை சார்பில், கோசுக்குறிச்சி, பெரியூர்பட்டி, குடகிபட்டி, செங்குறிச்சி, அஞ்சுகுழிப்பட்டி, வேம்பார்பட்டி, வேடசந்தூர், தங்கம்மாபட்டி, மேல்கரைப்பட்டி, வத்திப்பட்டி, தொட்டனம்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 17 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்;உயர்க் கல்வித் துறை சார்பில், ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கல்லூரிக் கட்டடம்; நீர்வளத் துறை சார்பில், பெரிச்சிபாளையம் கிராமம் – சண்முகநதி ஆற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை;

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் 6 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள், நூலகம் மற்றும் ஆய்வகக் கட்டடம்; அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், திண்டுக்கல், தோட்டனூத்து ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 21 இலட்சம் ரூபாய் செலவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தொழிற்கூடம்;மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கன்னிவாடி, குஜிலியம்பாறை, பூலத்தூர், பெரும்பள்ளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் வட்டார பொது சுகாதார அலகு மற்றும் துணை சுகாதார நிலையங்கள், வேடசந்தூர் – வடமதுரையில் பிலாத்து மலைவாழ் மக்களுக்கு பிரசவம் மற்றும் மகப்பேறு மருத்துவப் பயனாளிகளுக்கு 25 இலட்சம் ரூபாய் செலவில் மருத்துவக் கட்டடம்; வனத் துறை சார்பில், 1 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் சிறுமலை பல்லுயிர் பூங்கா, திண்டுக்கல் வனப்பாதுகாவலர் குடியிருப்பு; என மொத்தம், 337 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

Leave a Reply