நாட்டிலேயே முதல் முறையாக அனைத்து இந்திய ஆயுர்வேத மருத்துவ நிறுவனத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்:
உலகம் தற்போது இயற்கை அடிப்படையிலான உடல் நலத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத்துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.
தற்போது சுகாதார புரட்சி ஏற்படுத்த வேண்டிய நேரம். இதிலும் குறிப்பாக பழமையான ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாக கொண்டு இந்த புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக அலோபதி மருத்துவத்தை போன்று, ஆயுர்வேத மருத்துவத்திலும் உடனடி நிவாரணம் கிடைக்கும் வகையிலான மருந்துகளை துறை நிபுணர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்க விளைவுகள் ஏற்படுத்தாததாக அந்த மருந்துகள் இருக்க வேண்டும். இதற்கு தனியார் நிறுவனங்களும் நிதியுதவி செய்ய வேண்டும்.
ஆயுர்வேத மருத்துவத்தை புத்துயிர் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
எனவே, இதற்காக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆயுர்வேத மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும். மாவட்டந்தோறும் நல்ல ஆயுர்வேத மருத்துவமனைகளை ஏற்படுத்துவது என்ற உறுதிமொழியை ஆயுஷ் அமைச்சகம் ஏற்க வேண்டும்.
அதே நேரத்தில் அலோபதி உள்ளிட்ட அனைத்து வகை மருத்துவமுறைகளுக்கும் மரியாதை தரவேண்டும்.
விவசாயிகள் மருத்துவ பயிர்களை பயிரிட ஆயுஷ் மற்றும் விவசாய அமைச்சகங்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை வரும் 2022ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்தும் அரசின் திட்ட இலக்கை எளிதில் அடைய முடியும்.
உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வது மிக அவசியம்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
