மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் தமிழக அரசு அமைத்துள்ளது. 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், புதுடெல்லி, மான்சிங் சாலையில், “இருதய நோயில் இருந்து மீள்வது எப்படி” என்ற நிகழ்ச்சி அப்போலோ மருத்துவமனையின் சார்பில் 27.09.2017 அன்று நடைபெற்றது. இதில் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனர் & தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, நிர்வாக இயக்குனர் சங்கீதா ரெட்டி மற்றும் நிர்வாக தலைவர் ஹரி பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக தலைவர் ஹரி பிரசாத் கூறுகையில்,” முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் குறித்த அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் ஏற்கனவே மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் மரணம் குறித்து விசாரணை நடத்த தற்போது தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமித்துள்ளது. ஒரு வேலை இந்த புதிய குழுவின் விசாரணையின் போது மருத்துவமனையின் சிகிச்சையில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவர்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க நாங்கள் எப்போழுதும் தயாராகவே உள்ளோம்.
அப்போலோவை பொருத்த வரையில் மருத்துவமனையின் பாதுகாப்புக்காக மட்டும் தான் அனைத்து பகுதிகளிலும் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதே தவிர, சிகிச்சைக்காக வரும் எந்தவொரு நோயாளிகளின் அறைகளிலும் கேமராக்கள் பொருத்தப்படுவது கிடையாது. அதன் அடிப்படையில் தான் ஜெயலலிதா சிகிச்சைக்காக தங்கியிருந்த அறைகளிலும் கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக தலைவர் ஹரி பிரசாத் கூறியுள்ளது, அப்பட்டமான பொய்; மிகப் பெரிய பித்தலாட்டம்.
ஆம், அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (Intensive Care Unit- (ICU) உள்ள நோயாளிகளின் நிலை குறித்து அவரது உறவினர்கள், நண்பர்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் செல்போன் மூலம் தெரிந்து கொள்ளும் அதிநவீன வசதி உள்ளதாகவும், அதற்காகவே டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் பவுன்டேன் செயல்பட்டு வருவதாகவும், அப்பல்லோ மருத்துவமனையின் இணையதளத்தில் விரிவாகவும், மிக தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதோ அதற்கான ஆதாரம்:
தீவிர சிகிச்சை பிரிவில் மிகவும் மோசமான உடல் நிலையை கொண்டவர்களை மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். நோயாளிக்கு அதிகபட்சம் சிகிச்சை கிடைக்கவும், நோய் தொற்று போன்றவற்றை தடுக்கவும் நோயாளிகளின் உறவினர்கள், நண்பர்கள் அவ்வப்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்வதை குறைப்பதற்காகவும் இதுப்போன்ற கணினி வழியாக கேமராவில் பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நோயாளியின் நிலையை அறிய வரும் மருத்துவரிடம், நோயாளி இருக்கிறார் என்றும் பாராமல், அவரது உடல் நிலை குறித்து கேள்வி கேட்பதை தவிர்ப்பதற்காக, கணினி மூலம் மருத்துவர்களும் இருந்த இடத்திலிருந்தே பார்த்து கொள்ளும் வகையில் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளால் அங்கீகரிக்கப்படும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும். நோயாளி படுத்திருக்கும் படுக்கையின் மேல் உள்ள சுவிட்சை ஆன் செய்தால், கேமராவின் இயக்கம் தொடங்கிவிடும். அதன்பின்னர் மிகவும் துல்லியமாக, எலக்ட்ரோ கார்டியோகிராம்- Electrocardiogram (ECG) ஈசிஜி அளவுகள் உள்பட அனைத்தையும் பார்க்கலாம்.
இந்த வசதியை 24 மணி நேரமும் பெறலாம். இதன் மூலம் நோயாளியின் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும். இந்த வசதி குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பயனுடையதாக இருக்கும். நோயாளியை பரிசோதிக்க வரும் மருத்துவர்களும் அவர்களின் நிலை குறித்து உறவினர்களுக்கு விளக்க முடியும்.
அப்படியானால், இந்த வசதியை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஏன் வழங்கவில்லை. இதை செய்ய விடாமல் தடுத்தது யார்?
வீடியோ பதிவு விசியத்திலேயே இவ்வளவு பித்தலாட்டம் செய்யும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம், வேறு என்ன உண்மையை எதிர்பார்க்க முடியும்?!
நீங்கள் நினைப்பதைப் போல, ஜெ.ஜெயலலிதா ஒன்றும் தனி மனிதர் அல்ல; சுமார் 8 கோடி மக்களின் பிரதிநிதி; தமிழகத்தின் முதன்மை அமைச்சர்; தேசிய பாதுகாப்பு படையினரின் (National Security Forces) பாதுக்காப்பில் இருந்த அவருடைய உயிருக்கே உத்திரவாதம் இல்லாமல் போய்விட்ட நிலையில், அவரது மரணம் குறித்து விசாரணை செய்யும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமிக்கும், அவர் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க இருப்பவர்களுக்கும் யார் பாதுக்காப்பு வழங்குவது? அதை முதலில் உறுதிப்படுத்துங்கள்…! அதன் பிறகு விசாரணையை தொடங்குங்கள்….!
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
