அரசு மணல் குவாரியால் ஏற்படும் ஆபத்து
காடாகக் காட்சியளிக்கும் காவிரி
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருவளர் சோலை மற்றும் பனையபுரம் வழியாக கல்லணைச் செல்லும் சாலையில் காவிரி ஆற்றில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக இயந்திரங்களை கொண்டு இரவு பகலாக அரசு மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளும், அப்பகுதியை சுற்றியுள்ள கிராம பொதுமக்களும் தமிழக அரசு மீது கோபத்தில் உள்ளனர். விவசாயிகளும், அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் மக்களைத் திரட்டி போராடவும், அரசு மணல் குவாரியை முற்றுகையிடவும் தயாராகி வருகின்றனர். இவ்விசயத்தில் இனி மாவட்ட அரசு நிர்வாகத்தை நம்பி பயனில்லை.
எனவே, இப்பகுதியை நேரில் பார்வையிட்டு மேலணை (முக்கொம்பு) முதல் கல்லணை வரை சுமார் 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இனி இயங்காது என்ற உறுதியை தாங்கள் அளித்தால் விவசாயிகளும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம பொதுமக்களும் நிம்மதி அடைவார்கள். போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுங்கள் என்று, இதற்கு முன்பு தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கும், தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் மற்றும் தமிழக அரசு செயலாளர்களுக்கும், நமது “உள்ளாட்சித் தகவல்” இணைய ஊடகத்தின் ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் பல முறை புகைப்பட ஆதாரத்துடன் கடிதம் அனுப்பி இருந்தார்.
இது சம்மந்தமாக 15.03.2017 அன்று நமது “உள்ளாட்சித் தகவல்” இணைய ஊடகத்தில் புகைப்பட ஆதாரத்துடன் விரிவாக செய்தியும் வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில், கரிகாலன் கட்டிய கல்லணைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மணல் குவாரி குறித்து உரிய விசாரணைச் செய்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிறகாவது மணல் குவாரியை தடுத்து நிறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் மனச்சாட்சியோடு நடந்து கொள்வாரா? (அல்லது) வழக்கம் போலவே மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-கே.பி.சுகுமார்.
