ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று (19.03.2017) முற்பகல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்; இளைஞர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் பயிற்சி மையத்தைத் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்து உரையாற்றினார்.
அரசர்கள் முன்னிலையில் துதிபாடும் அரசியல் பாரம்பரியத்திற்கு இனிவரும் காலங்களில் இடம் கிடையாது; அறிவு மற்றும் சிந்தனையுடன் செயற்படும் அரசியல் இயக்கத்திற்காக இந்த அரசியல் பயிற்சி மையத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தேன்.
இன்று தூய அரசியல் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குள்ள முக்கிய சவால் அரசியல்வாதிகளுக்கு அனுபவம் இல்லாமையாகும். சில நேரங்களில் வீழ்ந்து, சில நேரங்களில் எழுந்து முன்னேறி வரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணம் தொடர்பாகக் கட்சியின் அனைத்து அரசியல்வாதிகளிடமும் தெளிவு காணப்பட வேண்டும்.
எந்தவொரு ஊழல்வாதியும் வெண்ணிற ஆடையை அணிந்துகொண்டு தேர்தலில் வெற்றிபெற முடிந்திருப்பது விருப்புத்தேர்வு முறைமையே காரணமாகும்.
அரசியல் கட்சிகளின் வீழ்ச்சி மற்றும் தனிநபர் வழிபாடு அரசியல் நிலைமையைச் சரி செய்வதற்கு அறிவையும், தெளிவையும் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும்.
அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பார்கிலும் சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் தேசியத்தையும், பாரம்பரியத்தையும் பேணி இலங்கை கலாசாரத்தை மதிக்கும் தேசாபிமானத்துடன்கூடிய அதிகாரத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவானது.
சரியான கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டத்துடன் கட்சி அன்றும், இன்றும் ஒரு பலமான அரசியல் கட்சியாக முன்னோக்கிப் பயணிக்கிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலமாக முன்னெடுத்துச் செல்வதற்கு தூய்மையும், நேர்மையும் கொண்ட ஒர் அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பலமான ஒரு பாதைக்கு வந்திருக்கிறது. கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகள் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகிறது. சரியான கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டமின்றி ஒரு அரசியல் இயக்கமாக முன்னேறிச் செல்வதற்கு ஒருவராலும் முடியாது.
உலகில் எங்குமே இடம் பெறாத அத்தகையதொரு நிகழ்வு எதிர்காலத்திலும் இடம்பெறாது. எதிர்காலத்தில் தூய அரசியல்வாதிகளை உருவாக்குவதற்காக இந்த அரசியல் பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மூன்றுமாத பயிற்சி நெறியின் பின்னர் சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
பல வருட காலமாகப் பேசப்பட்டு வந்த கட்சி வரலாற்றில் நிறைவேற்றப்படாதிருந்த இந்த அரசியல் பயிற்சி மையத்தை தனது தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கக் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்சியாக உள்ளது. இவ்வாறு இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரையாற்றினார்.
அரசியல் பயிற்சி மையத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் மூன்று உறுப்பினர்களுக்கான பதிவு அட்டைகளை இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கினார். ‘நிதஹஸ்’ செய்திப் பத்திரிகை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த, பைஸர் முஸ்தபா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார, செயலாளர் எரிக் பிரசன்ன வீரவர்த்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-வினித்.
