பிரதமர் நரேந்திர மோதி தலைமையில், மாநிலங்களுக்கு இடையேயான வளர்ச்சி கவுன்சில் கூட்டம் டெல்லியில் 16.07.2016 அன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் உரையை நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது;-
அரசியல் பொருளாதார சூழ்நிலைகளில் காணப்படும் வளர்ச்சியை அடுத்து, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவிலும் பரிணாம வளர்ச்சி ஏற்படுவது அவசியம்.
சட்டம் இயற்றுதல், நிர்வாகம், நிதி அதிகாரம் போன்ற குறிப்பிட்ட அம்சங்களில் அதிகாரத்தை மத்திய அரசுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. ஆனால் பொது அமைதி, பொதுசுகாதாரம், வேளாண்மை, கல்வி உள்பட மக்களின் நேரடி தொடர்புள்ள பல அம்சங்கள் தொடர்பான அதிகாரங்கள் எப்போதுமே மாநில அரசிடம் உள்ளன.
அரசியல், நிர்வாகம், பொருளாதார விஷயங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்று வந்தாலும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சி முறைக்கான மாற்றம் போதிய வேகத்தில் இல்லை.
மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயங்களை மத்திய அரசுக்கு மாற்றுவது, பொதுப்பட்டியலில் சேர்ப்பது, வரி வசூலை எடுத்துக்கொள்வது, மாநில அரசின் செயல்பாட்டுக்குள் ஆக்கிரமிப்பு செய்வது, குறிப்பாக பொது அமைதி பராமரிப்பில் அதிகார ஆக்கிரமிப்பு போன்றவற்றை எல்லாம் மாநிலத்துக்கு திருப்பித்தரவில்லை.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்துவதற்கு உறுதிமொழி எடுத்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் தேசத்தை கட்டுவதில் முன்பைவிட அதிகமாக மாநிலங்கள் சமமான பங்காளியாக இருந்து செயல்படுகிறது.
பலமான மாநிலங்கள் அமைந்தால்தான் பலமான மத்திய அரசு அமைய முடியும் என்று உறுதியாக நான் நம்புகிறேன். இந்திய நிர்வாக வடிவமைப்பு எப்போதுமே கூட்டாட்சி தத்துவத்தை பிரதிபலிக்கிறது. எனவே மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்கள், நிதி ஆதாரங்கள் வழங்கப்படாவிட்டால், கூட்டுறவு கூட்டாட்சி என்பது வெறும் சொல்லாகவே போய்விடும்.
விவாதித்து, கருத்துகள் பரிமாறி, இருதரப்பும் பலனடைவதற்கான கொள்கை, திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த கூட்டம் ஒரு சடங்காச்சாரமான கூட்டமாகவே அமைந்துவிடும். அனைத்து முக்கிய விஷயங்களிலும் மாநில அரசுடன் கொள்கை ரீதியான ஒத்துழைப்பை மத்திய அரசு அளிக்க வேண்டும். பிரச்சினைகளில் மாநில அரசு கொண்டுள்ள நோக்கம் மதிக்கப்பட வேண்டும்.
பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்பை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். மாநில அரசின் கருத்துகளைக் கேட்டு அதை மேலிடத்துக்கு கொண்டு செல்வதற்கான ஒழுங்கான செயல்முறை வகுக்கப்பட வேண்டும்.
நீதிபதி எம்.எம்.புன்சி கமிஷன் 2007-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அது தனது அறிக்கையை 2010-ம் ஆண்டு சமர்ப்பித்தது. இந்த சூழ்நிலையில் அந்த கமிஷனின் பரிந்துரைகளில் பல பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன. ஆனால் பல பரிந்துரைகள் இப்போது மிகவும் பொருத்தமானதாக உள்ளன.
அதுபற்றிய விரிவான விளக்கத்தை எனது அரசு பின்னர் சமர்ப்பிக்கும். முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மாநில அரசின் பட்டியலில் உள்ளவற்றை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவதில் தேவையான கட்டுப்பாடுகள், இதற்கான மத்திய அரசு சட்டத்தில் செய்ய வேண்டிய மறுபரிசீலனை போன்றவை எல்லாம், மிகவும் வரவேற்கத்தக்க பரிந்துரைகளாகும்.
அந்த வகையில் கல்வியை மீண்டும் மாநில அரசுப் பட்டியலுக்கு, அதாவது அது முன்பு இருந்த இடத்துக்கே கொண்டு வருவதற்கு இது உகந்த நேரமாகும். வனம், வன உயிரினங்கள் ஆகியவை மாநில அரசுப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டன. அதுபோலவே சுற்றுச்சூழல், தட்ப வெட்ப மாற்றம் போன்றவையும் மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்படாமல் பொதுப்பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
வெளிநாடுகளுடன் மத்திய அரசு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போது மாநில அரசின் நலன்கள் எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு முக்கிய பரிந்துரைகளை கமிஷன் அளித்துள்ளது.
மத்திய மாநில முதலீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பான வரைவு (சி.எஸ்.ஐ.ஏ.), நிதித்துறை அமைச்சகத்துக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசுக்கே பிரத்யேகமாக இருந்த இடத்தில் தற்போது மாநில அரசுக்கு இடமளித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இதன் மூலம், மற்ற சில விஷயங்களிலும் இருதரப்பு ஒப்பந்தத்தை நுழைப்பது நியாயமற்றது.
ஆனால், சமரச தீர்வு மையத்தில் எதிர்மறையான தீர்ப்பு வரும் பட்சத்தில், நிதி தொடர்பான மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புக்கான பொறுப்பு குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் மட்டுமே உள்ள குழு மூலம் முடிவு செய்யப்படும் என்பது இயற்கை நீதிக்கு முரணானது. மாநில அரசுக்கு அதில் பங்களிப்பு வேண்டும்.
அதுபோல் பாக்கிகளை தனிச்சையாக மத்திய அரசு கழித்துக் கொள்ளலாம் என்பதும் முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. இது மாநில அரசின் திட்டங்களை பாதிக்கும். எனவே இதுதொடர்பான முன்மொழிவு, சி.எஸ்.ஐ.ஏ. வரைவில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
மாநில கவர்னர் நியமனம், நீக்கம் தொடர்பான பரிந்துரைகளையும் நீதிபதி புன்சி கமிஷன் அளித்துள்ளது. இதுதொடர்பான சில விவாதங்களை முன்வைக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு வெளியே இருந்து வரும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பது தொடர்பான பரிந்துரைகள், இந்த காலகட்டத்துக்கு மிகவும் அவசியமாக உள்ளன.
குறிப்பாக, பாரம்பரிய பாக். நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் அப்பாவி தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இது தேவையான ஒன்றாக இருக்கும். இந்த விஷயத்தில் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளின் தீர்வுக்காக குழு அமைப்பது பற்றி கமிஷன் பரிந்துரைத்துள்ளது. இதுபோன்ற நிலையான உறுதியான அம்சங்கள் இல்லாததினால்தான் கோர்ட்டுகளை நாட வேண்டியதுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான உறுதியான கவுன்சில் உருவாவதை வரவேற்கிறோம்.
டெல்லி மேல்-சபை பற்றியும் சில கருத்துகளை நீதிபதி புன்சி கமிஷன் அளித்துள்ளது. நமது கூட்டாட்சி முறையில் டெல்லி மேல்-சபை முக்கியமான ஒன்றாகும். அதன் செயல்பாட்டை குறைக்கக்கூடாது. தற்போதைய அளவின்படியே உறுப்பினர் தேர்வு இருக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக வரி விதிப்பு, உபரி வரி வசூல் ஆகியவற்றை மத்திய அரசு வித்தியாசமான செயல்பாட்டை கொண்டுள்ளது. இதில் பழைய நிலையை மீண்டும் கொண்டுவர வேண்டும். இந்த விஷயத்தில் நான் ஏற்கனவே கருத்து கூறியிருக்கிறேன்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு விவகாரத்தில் நீதிபதி புன்சி கமிஷன் சில பரிந்துரைகளை அளித்துள்ளது. இது இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. வருவாயில் சமத்துவம் தேவை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றடுக்கு என்ற நிலை மாற்றப்பட்டு எளிமையான இரண்டு அடுக்கு நிலை வரவேண்டும் என்று நீதிபதி புன்சி கமிஷனின் பரிந்துரையை தமிழகம் ஆதரிக்கிறது.
மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பொது அமைதியும் சமாதான நிலையும் அவசியம். 2023-ம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தின்படி, தமிழகத்தில் வறுமை இருக்கக்கூடாது என்பதாகும்.
இந்த கூட்டத்தில் நான் பெருமையுடன் ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். தமிழகம், வகுப்புவாத வன்முறைகள், இடதுசாரி தீவிரவாதம், மத அடிப்படைவாத வன்முறை இல்லாத மாநிலமாகத் திகழ்ந்து, சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், போலீசுக்கு நான் முழு சுதந்திரம் அளித்திருப்பதுதான்.
சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் சாதனையை தமிழகம் தொடுகிறது. அமைதியின் சொர்க்கமாக தமிழகம் திகழ்கிறது என்பதே இந்திய அளவில் தமிழகத்தைப் பற்றிய பேச்சாக இருக்கும்.
சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க முயற்சிக்கும் சமூக விரோத சக்திகளின் சவால்களை, திறமையான, வலிமையான, கட்டுக்கோப்பான போலீஸ் படையுடன் எதிர்கொள்வதுதான் இதற்கு காரணம். போலீசாருக்கென்று நல்ல பணியிட வசதிகள், உடல் நலன் காப்பீடு, பணிப் படிகள், வீட்டு வசதிகளை நான் செய்துகொடுத்துள்ளேன்.
அடிப்படைவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஒடுக்குவதில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தூண்டும் விதமான பேச்சுகள், எழுத்துகள் ஆகியவற்றை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தகவல்களை சேகரிப்பதில் போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர்.
வெளிநாட்டு தொடர்புகள், நிதி ஆதாரம், சமூக வலைத்தள பங்களிப்பு ஆகியவை மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வழிபாட்டு பகுதிகளை தவறாக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தடுப்புச் சட்டங்கள் கடுமையாக பயன்படுத்தப்படுகிறது.
கர்நாடகா, கேரளாவில் இருந்து, தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் நுழைவதற்கு மாவோயிஸ்டுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இடதுசாரி தீவிரவாத கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் சில அமைப்புகளின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் பெறப்படும் ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் பொது அமைதி காக்கப்பட்டு வருகிறது. பல பிரிவுகளைக் கொண்ட தமிழ்நாடு போலீஸ், ரகசிய தகவல்களை சேகரிப்பதில் திறம்பட செயல்படுகிறது.
தேவைப்படும் தகவல்களை மற்ற மாநிலங்களிடமோ, மத்திய அரசிடமோ அந்த தகவல்களை மாநில அரசின் முகமைகள் கொண்டு சேர்க்கின்றன. தமிழகத்தின் நுண்ணறிவும், அதன் பலமும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தேசத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டியது, மாநில அரசுகளின் அடிப்படை கடமையாகும். இதற்கு மத்திய அரசின் செயல்பாட்டு ஒத்துழைப்பும், புரிந்துணர்வும் அவசியம். இந்த அடிப்படையில் நீதிபதி புன்சியின் பரிந்துரைகள் பார்க்கப்பட வேண்டும். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஒருங்கிணைப்புக் குழு (என்.ஐ.சி.) பார்வையிடும் என்பதெல்லாம், தேவையற்ற பிரச்சினைகளையும் பதற்றத்தையுமே ஏற்படுத்தும்.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு மிரட்டல்கள் விடப்பட்டு வருகின்றன. இதை ஒடுக்குவதற்கு நவீன கருவிகள் மற்றும் பயிற்சி அவசியம். இதற்காக தமிழக அரசு முதலீடு செய்து வருகிறது. எனவே இதற்கான நிதியை மத்திய அரசு அதிகப்படுத்தித் தரவேண்டும்.
சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில், பாதிக்கப்பட்ட மாநில பகுதிகளுக்கு தனிச்சையாக மத்திய படைகளை அனுப்புவது, அங்கு மத்திய அரசு விதிகளை அமல்படுத்துவது போன்றவை தொடர்பான பரிந்துரைகள் அபாயகரமானவை. மாநில அரசின் மீது நம்பிக்கையற்ற இந்த பரிந்துரையை ஏற்க முடியாது. அதை உடனே நிராகரிக்க வேண்டும்.
மாநில போலீஸ் படையை பலப்படுத்துவதற்காகவும், நவீனப்படுத்து வதற்காகவும் நிதி அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை வரவேற்கத்தக்கது. போலீஸ் படையை நவீனப்படுத்தும் முயற்சியில் நிதிப்பற்றாக்குறைதான் குறுக்கே நிற்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தரப்படும் நிதியை உயர்த்த வேண்டும்.
போலீஸ் படையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியில் ரூ.171.15 கோடி பாக்கியுள்ளது. இதை உடனே தந்து உதவ வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை மிக அவசரமாக கேட்டுக் கொள்கிறேன். அதோடு, தீபகற்ப நதிகள், மாநிலங்களுக்கு இடையேயான ஆறுகள் ஆகியவற்றை இணைக்கும் செயல்பாட்டையும் மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும்.
தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவில் உள்ளவர்களில் 95.20 சதவீதம் பேரிடம் பயோமெட்ரிக் அடையாளம் (கைரேகை, கருவிழி பதிவு) பெறப்பட்டுள்ளது. அவர்களில் 91.9 சதவீதம் பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஆதார் எண் வழங்குவதை மேலும் துரிதப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு, மாநில அரசின் வழியாகத்தான் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும். நிர்வாக ரீதியாக இதுதான் முறை.
கல்வி தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 74 ஆயிரத்து 316 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் மூலம் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:25 என்றும், உயர்நிலைப் பள்ளிகளில் 1:26 என்றும் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்குத் தரப்பட வேண்டிய தொகையில் ரூ.576.37 கோடி இன்னும் தரப்படவில்லை. ஆனாலும் அதில் தமிழக அரசு அனைத்து பணிகளையும் முடித்துள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கையில் தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (நீட்) மாநிலங்களில் மத்திய அரசு திணிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
