அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, தமது முதற்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று (03.03.2014) தொடங்கினார். நத்தப்பேட்டையிலிருந்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ள காஞ்சிபுரம் நகரம் தேரடிப்பகுதி வரை, சாலைகளின் இருமருங்கிலும் கழகக் கொடிகளும், தோரணங்களும், வரவேற்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரை வரவேற்கும் வகையில், பலவண்ண பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. காஞ்சிபுரம் தேரடியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து ஜெயலலிதா பேசியதாவது:-
1947-ல் மக்கள் மத்தியில் நிலவிய உணர்வு இன்றும் நிலவுகிறது. கொள்ளையர்களை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு உள்ளது. எனவே, மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறியவேண்டும். மத்தியில் மாற்றம் ஏற்பட தமிழக மக்களின் பங்களிப்பு அவசியம். அந்த மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகளை வழங்கி கல்வியில் அ.தி.மு.க. அரசு ஒரு புரட்சி ஏற்படுத்தியுள்ளது. 100 கோடியில் கல்லூரி உட்கட்டமைப்பு வசதிகள், மீனவர்களுக்கு நிவாரணம், சிறுபான்மையினர் நலத்திட்டங்கள், வேளாண் துறையில் புரட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி விஷம் போல் ஏறியுள்ளது.
இலங்கைத் தமிழர் விஷயத்தில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளது. சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் வகையில் மருத்துவத்துறையில் பொது நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது. கச்சத்தீவு வழக்கில் மீனவர் நலனுக்கு எதிராக மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது. இந்த மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டும் அல்ல. இந்தியாவின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் தேர்தல். எனவே, தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.