தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது “இடைத்தேர்தல் பிரச்சாரத்தை” ரத்து செய்து விட்டு டெல்லிக்குச் சென்று, போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேச வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை.

mks

டெல்லி ஜந்தர் மந்தரில் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து கடந்த 14.03.2017-ஆம் தேதியிலிருந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசும் மதிக்கவில்லை என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

km

TN.FORMERS IN DELHI

நாடு முழுவதும் உள்ள நதிகள் இணைப்பு, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல், தமிழகத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் வழங்குதல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுதல், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளித்தல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் 13-ஆவது நாளாக தொடர் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் அமைதியாக அறவழி போராட்டம் நடத்தினார்கள். அறவழிப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக “சங்கு ஊதி போராட்டம்”, “சடலம் போல் படுத்துப் போராட்டம்”, “ஒப்பாரி வைக்கும் போராட்டம்” எல்லாம் நடத்திப் பார்த்து, இறுதியில் “மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளும்” போராட்டத்தில் இறங்கி தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ள விவசாயிகள் முயன்றது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பல்வேறு அமைதி வழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கழக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு மதிப்பளித்து உடனடியாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டேன். சட்டமன்றத்திலும் பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசும் போது, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைச் சுட்டிக்காட்டி உடனடியாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என “பினாமி” அரசுக்குக் கோரிக்கை வைத்தேன்.

ஆனால் குற்றவாளி வழிகாட்டுதலில் செயல்படும் “பினாமி” அரசு விவசாயிகளின் டெல்லிப் போராட்டம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு எப்படி பணம் கொடுப்பது என்பது பற்றிய வியூகம் வகுப்பதில் மும்முரமாக இருப்பது, இந்த அரசுக்கு விவசாயிகள் நலன் பற்றி கிஞ்சிற்றும் அக்கறையில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் எல்லாம் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தமிழக நடிகர்கள் சென்றுப் பார்த்து ஆறுதல் கூறுகிறார்கள். மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்று சந்தித்துள்ளார்.

ஆனால் இதுவரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் போராடும் விவசாயிகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. டெல்லியில் போராடும் விவசாயிகளை ஓடோடிச் சென்று சந்தித்து, உரிய வாக்குறுதிகளை அளித்து, விவசாயிகளை திரும்பவும் பத்திரமாக அழைத்து வந்திருக்க வேண்டிய முதலமைச்சர், “பெரா” குற்றவாளிக்கு ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு கேட்பதில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது வெட்கக் கோடாக இருக்கிறது.

2014 பாராளுமன்ற தேர்தலுக்கு வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் “வளமையான விவசாயம்” என்பதை முழக்கமாக அறிவித்தது.

60 வயதுக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளுக்கு நலத் திட்டங்கள், விவசாயிகளின் விலை பொருள்களுக்கு 50 சதவீத லாபம் கிடைக்கும் திட்டங்கள், மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்தது. அப்படி விவசாயிகளைக் கவரும் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. தனது மத்திய வேளாண்துறை அமைச்சரைக் கூட அனுப்பி 13 நாட்களாக போராடும் தமிழக விவசாயிகளின் குறைகளை நேரில் கேட்க முன்வரவில்லை.

தமிழகத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மத்திய அரசிடம் உள்ள செயல்திட்டம் என்ன என்று உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பிய பிறகும் கூட இது போன்று விவசாயிகள் நடத்தும் உணர்ச்சிமிகு போராட்டங்களை மத்திய அரசு மதிக்கத் தவறுவது உள்ளபடியே வேதனையளிக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் விதமாக 40 ஆயிரம் ரூபாய் வறட்சி நிவாரண நிதி கேட்டதற்கு 2014 கோடி ரூபாய் வறட்சி, வர்தா புயல் நிவாரணமாக வழங்கியுள்ளது கண்டனத்திற்குரியது.

ஆகவே, தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக தனது “இடைத்தேர்தல் பிரச்சாரத்தை” ரத்து செய்து விட்டு டெல்லிக்குச் சென்று, போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேச வேண்டும். அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்று பிரதமர் நரேந்திரமோடி அவர்களை சந்தித்து தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை விளக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசும் விவசாயிகளின் நலன் கருதி வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரணமாக தமிழக அரசு ஏற்கனவே கோரியிருக்கும் 62 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 -கே.பி.சுகுமார்.