இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கும், தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகள், போன்ற அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் மாபெரும் முயற்சியாக ஒரு புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கி வருகிறது. ஒரே குடையின் கீழ் அனைத்து சேவைகளையும் வழங்கும் இந்தப் புதிய தளமான இசிஐநெட் (ECINET), தேர்தல் ஆணையத்தின் தற்போதைய 40 க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளையும், வலைதளங்களையும் ஒருங்கிணைத்து மறுசீரமைக்கும்.
தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு தனித்துவமான தளமாக செயல்படுவதன் மூலம் இசிஐநெட், எளிமைப்படுத்தப்பட்ட பயனர் அனுபவத்தைக் கொண்டிருக்கும். பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்து அவற்றைப் பயன்படுத்துவது, வெவ்வேறு உள்நுழைவு கடவுச் சொல் குறியீடுகளை நினைவில் கொள்வது ஆகியவற்றால் ஏற்படும் சுமையைக் குறைக்க தேர்தல் ஆணையத்தால் இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2025-ல் நடைபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மாநாட்டின் போது, தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் முன்னிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமாரால் இந்த செயலி குறித்த கருத்து வெளியிடப்பட்டது.
இசிஐநெட் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணினிகள் அல்லது ஸ்மார்ட்போன்களின் மூலமாக தேர்தல் தொடர்பான தகவல்களை அணுக முடியும். இசிஐநெட் தரவுகள் துல்லியமாக இருப்பது உறுதி செய்யப்படும்.
இசிஐநெட் ஆனது, வாக்காளர் உதவி மைய செயலி, வாக்காளர் பதிவு செயலி, சி விஜில், சுவிதா 2.0, இஎஸ்எம்எஸ், சாக்ஷம், கேஒய்சி செயலி போன்ற ஏற்கனவே உள்ள செயலிகள், வலை தளங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இவை அனைத்தையும் தற்போது 5.5 கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இசிஐநெட் கிட்டத்தட்ட 100 கோடி வாக்காளர்களுக்கும், 10.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட சுமார் 15 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், கிட்டத்தட்ட 45 லட்சம் வாக்குச்சாவடி அதிகாரிகள், 15,597 உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள், 4,123 தேர்தல் அதிகாரிகள் மற்றும் 767 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அடங்கிய முழு தேர்தல் அமைப்புக்கும் நல்ல பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசிஐநெட் வடிவமைப்பு ஏற்கனவே மேம்பட்ட கட்டத்தை எட்டியுள்ளது, மேலும் சிறந்த செயல்பாடு, பயன்பாட்டில் எளிமை, வலுவான இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 36 தலைமைத் தேர்தல் அதிகாரிகள், 767 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடனான விரிவான ஆலோசனைக்குப் பிறகு இது உருவாக்கப்படுகிறது.
இசிஐநெட் மூலம் வழங்கப்படும் தரவுகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் விதிகள், தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் வழிமுறைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப, சட்ட கட்டமைப்பிற்கு இணங்க கண்டிப்பாக அமையும்.
எம்.பிரபாகரன்