குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மே 3, 2025) புது தில்லியில் இந்திய மத்தியஸ்த சங்கத்தைத் தொடங்கி வைத்து, முதல் தேசிய மத்தியஸ்த மாநாடு 2025-ல் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பேசிய குடியரசுத் தலைவர், 2023-ம் ஆண்டின் மத்தியஸ்த சட்டம், நாகரிக மரபை ஒருங்கிணைப்பதில் முதல் படியாகும் என்று கூறினார். இப்போது நாம் அதற்கு உத்வேகம் அளித்து அதன் நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கிராமங்களில் ஏற்படும் மோதல்களை மத்தியஸ்தம் செய்து வைத்து தீர்க்க பஞ்சாயத்துகள் சட்டப்பூர்வமாக அதிகாரம் பெறும் வகையில் மத்தியஸ்த சட்டத்தின் கீழ் உள்ள தகராறு தீர்க்கும் வழிமுறையானது கிராமப்புறங்களுக்கும் திறம்பட விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். கிராமங்களில் சமூக நல்லிணக்கம் என்பது தேசத்தை வலிமையாக்குவதற்கு அவசியமானது என்று அவர் கூறினார்.
நமது அரசியலமைப்பின் மையமாக உள்ள நீதி வழங்கலில் மத்தியஸ்தம் ஒரு முக்கிய பகுதியாகும் என்றும் அவர் கூறினார். மத்தியஸ்தம் என்பது பரிசீலனையில் உள்ள குறிப்பிட்ட வழக்கில் மட்டுமல்லாமல், பிற வழக்குகளிலும் நீதி வழங்கலை விரைவுபடுத்த உதவும் என அவர் தெரிவித்தார். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அதிக எண்ணிக்கையிலான வழக்குகளையும் அவை ஏற்படுத்தும் சுமையையும் இது குறைக்கும் என அவர் குறிப்பிட்டார். இது ஒட்டுமொத்த நீதி அமைப்பை மிகவும் திறமையானதாக மாற்றும் எனவும் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
இந்தியாவில் நீதித்துறை வழிமுறைகளுக்கு நீண்ட மற்றும் வளமான பாரம்பரியம் உள்ளது என்றும், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வுகள் விதிவிலக்காக இல்லாமல் ஒரு விதிமுறையாகவே இருந்தன என்றும் அவர் கூறினார்.
பூசல்களுக்கான தீர்வு மற்றும் முரண்பாடுகளுக்கான தீர்வை வெறும் சட்டத் தேவையாக மட்டுமல்லாமல் ஒரு சமூக கட்டாயமாகவும் நாம் பார்க்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். மத்தியஸ்தமானது உரையாடல், புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
திவாஹர்