அருணாச்சலப் பிரதேசத்தின் காம்லே மாவட்டத்தில் கேலோ இந்தியா பன்னோக்கு அரங்கத்தை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பைக் கணிசமாக மேம்படுத்தும் வகையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று (03-05-2025) அருணாச்சலப் பிரதேசத்தின் காம்லே மாவட்டத்தில் கேலோ இந்தியா பன்னோக்கு அரங்கத்தைத் திறந்து வைத்தார். மாநில அமைச்சர்கள் திரு கென்டோ ஜினி, திரு நியாடோ டுகாம் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ள இந்த கேலோ இந்தியா பன்னோக்கு மண்டபம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தப் பிராந்தியத்தில் கடைக்கோடி அளவிலான விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளையும் பயிற்சி வசதிகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் கூடிய இந்த அரங்கம், குத்துச்சண்டை, பூப்பந்து, ஜூடோ, வுஷு, கராத்தே, டேக்வாண்டோ, பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், கைப்பந்து உள்ளிட்ட பல உட்புற விளையாட்டுகளுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் தொழில்முறை பயிற்சி பெற்று தேசிய, சர்வதேச நிலைகளில் போட்டியிட முடியும்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, தொலைதூர மாவட்டங்களில் விளையாட்டு மேம்பாட்டிற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இந்த முயற்சி நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் திறமைகளை ஊக்குவிப்பது என்ற நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது எனவும் அவர் மேலும் கூறினார். அருணாச்சலப் பிரதேசம் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது எனவும் இந்த மாநில இளைஞர்கள் விளையாட்டில் பிரகாசிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசு செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

மத்திய அமைச்சர், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்த மையத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள அவர்களை ஊக்குவித்தார். உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் ஒழுக்கத்தை அன்றாட வாழ்க்கையில், குறிப்பாக இளைஞர்களிடையே ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்த நிகச்சியின் போது இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், மாநில அரசு பிரதிநிதிகள், உள்ளூர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply