எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிக் கணக்கெடுப்பையும் சேர்க்க முடிவு செய்துள்ளது. நாடு மற்றும் சமூகத்தின் முழுமையான நலன்கள் மற்றும் மதிப்புகளுக்கு தற்போதைய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 246 ஆவது பிரிவின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஏழாவது அட்டவணையில் மத்தியப் பட்டியலில் 69 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் சாதிகளைக் கணக்கிட கணக்கெடுப்புகளை நடத்தியிருந்தாலும், இந்த ஆய்வுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் நோக்கத்தில் வேறுபடுகின்றன. சில கணக்கெடுப்புகள் முற்றிலும் அரசியல் கோணத்தில் நடத்தப்படுகின்றன. இது சமூகத்தில் சந்தேகங்களை உருவாக்குகிறது. இத்தகைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், நமது சமூகக் கட்டுமானம் அரசியல் நிர்ப்பந்தத்தின் கீழ் வராமல் இருப்பதை உறுதி செய்யவும், சாதிக் கணக்கெடுப்பை ஒரு தனி கணக்கெடுப்பாக நடத்துவதற்குப் பதிலாக பிரதானக் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது  பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுவடைவதை உறுதி செய்யும். மேலும் நாட்டின் முன்னேற்றம் தடையின்றி தொடரும். சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது, அது சமூகத்தின் எந்தப் பிரிவினரிடமும் பதற்றத்தை உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடத்தப்பட்ட அனைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளிலும் சாதி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. 2010ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் அமைச்சரவையில் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த விஷயத்தில் விவாதிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. மேலும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பரிந்துரைத்தன. எனினும், முந்தைய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு பதிலாக சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு என்று அழைக்கப்படும் கணக்கெடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

Leave a Reply