புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இன்று புதுதில்லியில் “பசுமை ஹைட்ரஜன் விநியோகச் சங்கிலியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்” குறித்த ஒரு நாள் தேசியப் பயிலரங்கை நடத்தியது. இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் சூழல் அமைப்பின் வளர்ச்சியில் எம்.எஸ்.எம்.இ.க்களின் வாய்ப்புகளை ஆராய்வது மற்றும் அவற்றின் முக்கிய பங்கு பற்றி விவாதிப்பதை இந்தப் பயிலரங்கு நோக்கமாகக் கொண்டிருந்தது. எம்.எஸ்.எம்.இ.க்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்பங்களை வழங்குநர்கள், தொழில்துறை சங்கங்கள் மற்றும் சர்வதேச கூட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர் குழுக்களிலிருந்து 300- க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தொடக்க உரையை நிகழ்த்திய மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் வெங்கடேஷ் ஜோஷி, புத்தாக்கங்கள் வழி நடத்தும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். மேலும் எம்.எஸ்.எம்.இ.க்கள் தங்கள் புதுமையான திறன்கள் மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட தீர்வுகள் மூலம் இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தின் முதுகெலும்பாகச் செயல்படுகின்றன என்பதையும் அவர் வலியுறுத்தினார். 2030 -ஆம் ஆண்டுக்குள் தற்சார்பு பசுமை ஹைட்ரஜன் சூழல் அமைப்பை உருவாக்கும் இயக்கத்தின் நோக்கங்களை நனவாக்குவதில் எம்.எஸ்.எம்.இ.க்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் சான்றிதழ் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை சான்றளிப்பதற்கும், வெளிப்படைத்தன்மை, தடமறிதல் மற்றும் சந்தை நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு அடித்தள படியாக இந்தத் திட்டம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு. சந்தோஷ் குமார் சாரங்கி, தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்க அமலாக்கத்தில் எட்டப்பட்டுள்ள சில முக்கிய சாதனைகளை எடுத்துரைத்தார். இந்த புதிய தொழில்துறை நிலப்பரப்பில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்க குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திறன்களை உருவாக்குதல், நிதி வசதி அளித்தல் மற்றும் தொழில்நுட்ப இணைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பசுமை ஹைட்ரஜனுக்கு நிறுவன மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை உருவாக்குவதில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்,
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு, குழு உறுப்பினர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு மாதிரிகள், இருமுனை தகடுகள் மற்றும் எலக்ட்ரோலைசர்கள் போன்ற கூறுகளின் உள்நாட்டுமயமாக்கல் மற்றும் அறிவு நிறுவனங்களின் பங்கு குறித்து இந்தப் பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.
எம்.பிரபாகரன்